கான்பூர்: 2024 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 50 விக்கெட்களை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பும்ரா. இதை அடுத்து இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது அவருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசி அவர் மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அதன் மூலம் அவர் இந்த ஆண்டு 50 சர்வதேச விக்கெட்கள் என்ற மைல் கல்லை எட்டினார். இந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டது. முதல் நாள் அன்று 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் அதன் பின் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் நான்காவது நாள் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது. முதல் நாள் அன்று விக்கெட் வீழ்த்தாத பும்ரா, நான்காவது நாள் அன்று முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

முஷ்பிகுர் ரஹீம், பும்ரா பந்து வீச்சில் பவுல்ட் அவுட் ஆகி இருந்தார். அதன் பின்னர் மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் தய்ஜுல் இஸ்லாம் ஆகிய இருவரின் விக்கெட்களையும் அடுத்தடுத்து வீழ்த்தினார் பும்ரா. 18 ஓவர்களில் 50 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
2024 ஆம் ஆண்டு அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் பந்து வீசி 35 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். மேலும், இந்த ஆண்டு 8 டி20 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். மொத்தமாக 21 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்திலும் இருக்கிறார் பும்ரா.
அவருக்கு அடுத்த இரண்டு இடங்களில் ஹாங் காங்கின் எஹ்சான் கான் 46 விக்கெட்களுடனும், ஆஸ்திரேலியாவின்ஜோஷ் ஹேசல்வுட் 44 விக்கெட்களுடனும் இடம் பெற்று உள்ளனர். இந்த ஆண்டு இந்திய அணி அடுத்து எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் பும்ரா மேலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பதால் இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பும்ராவுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் போட்டியில் பும்ரா மூன்று விக்கெட்களை வீழ்த்திய நிலையில், வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகமது சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.