கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் அமைக்கப்பட உள்ள பிட்ச் சென்னை சேப்பாக்கத்தில் இருந்த பிட்ச் போன்றே இருக்கும் என கான்பூர் மைதான ஊழியர் தெரிவித்து இருந்தார். ஆனால். அதற்கு நேர்மாறான விஷயம் நடந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சிவப்பு நிற மண் கொண்ட பிட்ச் தயாரிக்கப்பட்டு இருந்தது. அந்த பிட்ச்சில் முதல் இரண்டு நாட்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். கடைசி மூன்று நாட்களில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். அது அப்படியே முதல் டெஸ்ட் போட்டியில் நடந்தது.

அதே போலவே கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச்சும் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கு கருப்பு நிற மண் கொண்ட பிட்ச் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன் குவிக்கும். ஆனால், அதன் பின் ரன் குவிப்பது சிரமமாக மாறிவிடும்.
அதே போல, முதல் சில மணி நேரங்கள் மட்டுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அதன் பின் சுழற் பந்துவீச்சாளர்களே அதிக ஓவர்கள் வீசும் நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், முதலில் பேட்டிங் செய்யும் பணி அதிக ரன் குவிக்கும் என்றாலும் கூட டாஸ் வென்ற பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன் மூலம், அவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து வங்கதேச அணியை முதல் இன்னிங்க்ஸில் எளிதில் சுருட்டி விடலாம் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்தப் போட்டியின் முதல் மூன்று நாட்களின் போது மழை குறுக்கிட அதிக வாய்ப்பு உள்ளது.