கான்பூர்: வங்கதேச அணியின் மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன் தனது சொந்த நாட்டில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார். ஆனால், அவருக்கு எதிராக வங்கதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளது. இந்த நிலையில் வங்கதேச கிரிக்கெட் அமைப்பு தங்களால் அவருக்கு எந்த பாதுகாப்பையும் வழங்க முடியாது என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது.
இதை அடுத்து தற்போது நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியே ஷகிப் அல் ஹசனின் கடைசி போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. வங்கதேச அணிக்காக பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார் ஷகிப் அல் ஹசன். இந்த ஆண்டு நடைபெற்ற வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங் கட்சியாக இருந்த ஆவாமி லீக்-இல் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

அதன் பின் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் ஆவாமி லீக் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சம் புகுந்து இருக்கிறார். கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் தலைமுறைவாகி உள்ளனர். கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருவதால் ஷகிப் அல் ஹசன் தாக்குதல் சம்பவங்களிலிருந்து தப்பினார்.
இதன் இடையே, வங்கதேச நாட்டில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட ஒரு வாலிபரின் தந்தை ஷகிப் அல் ஹசன் உட்பட நூற்றுக்கணக்கான ஆவாமி லீக் பிரமுகர்கள் மீது புகார் அளித்து இருக்கிறார். அவர்கள் அனைவரின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதனால் எப்போது வங்கதேசத்திற்கு ஷகிப் அல் ஹசன் திரும்பினாலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது.
ஒருவேளை அவர் கைது செய்யப்படவில்லை என்றாலும் கிரிக்கெட் போட்டியில் ஆடும் போது போராட்டக்காரர்கள் அவர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான் ஷகிப் அல் ஹசன் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென வங்கதேச கிரிக்கெட் அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார்.
தான் மிர்பூரில் நடக்க உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற விரும்புவதாக அறிவித்து இருந்தார். ஆனால், இது குறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் அதிகாரி தங்களால் எந்த பாதுகாப்பும் அளிக்க முடியாது எனவும், வங்கதேச அரசு தான் இதில் முடிவு எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதை அடுத்து ஷகிப் அல் ஹசன் நாடு திரும்புவாரா? அப்படியே திரும்பினாலும் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எனவே, இந்தியாவுக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியே அவரின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.