கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடிவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் தாமதம் ஆனது. சுமார் 2 மணி நேரம் மைதானத்தில் காத்திருந்த இந்திய வீரர்கள் 11 மணி அளவில் மைதானத்தில் இருந்து தங்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பினர். மழை இடையே நின்ற போதும் அவர்கள் திரும்பவில்லை.
அதனால், இரண்டாவது நாள் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இரண்டாவது நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதால் இந்திய அணி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என தெரிகிறது.
வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தின் போதும் மழை பெய்ததால் போட்டி தாமதமாக துவங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தது.

மழையின் காரணமாக இந்தப் போட்டியின் முதல் மூன்று பாதிக்கப்படும் என்பதால் இந்திய அணி கடந்த 9 ஆண்டுகளில் முதன்முறையாக டாஸ் வென்ற பின் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது. முதல் நாள் ஆட்டத்தில் வெறும் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து இருந்தது. இடையே மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் முதல் நாள் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (செப்டம்பர் 28) காலை 9.30 மணிக்கு துவங்கி இருக்க வேண்டும். ஆனால், மழையின் காரணமாக போட்டி துவங்கவில்லை. இரண்டாவது நாளின் பெரும் பகுதி ஆட்டம் மழையால் தடைபடும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. கான்பூரில் உள்ள இந்த மைதானத்தின் ஆடுகளம் முழுமையாக பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டு உள்ளது.
இரண்டாவது நாளின் போட்டி நேரத்தில் அதிக அளவு மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்திய அணி எதிர்பார்த்ததுபோல முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி விரைவாக விக்கெட்களை இழக்கவில்லை. எனினும், மழையால் அடிக்கடி தாமதம் ஏற்படுவதால் வங்கதேச வீரர்கள் நிலையாக பேட்டிங் செய்வதில் சிரமம் ஏற்படும். அது ஒரு வகையில் இந்திய அணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.