பெங்களூர்: துலீப் டிராபி இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறுவதற்காக நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தனியாளாக போராடி அரைசதம் விளாசியது பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் நிச்சயம் சேர்க்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.
2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய டி20 அணியில் இருந்து கேஎல் ராகுல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இனி வரும் காலங்களிலும் டி20 கிரிக்கெட் பக்கமே கேஎல் ராகுல் வர வாய்ப்பில்லை என்பதால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார். அதிலும் தொடக்க வீரராக அல்லாமல் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் கவனம் செலுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி விளையாடி வருகிறது. இதனால் கேஎல் ராகுல் ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டர் வீரராக சோதனை செய்து பார்க்கப்பட்டார். அதிலும் அசத்தலாக கேஎல் ராகுல் செயல்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்கினார்.
அப்போது சிறப்பாக ஆடி சதம் விளாசிய கேஎல் ராகுல், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிடில் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த வீரராக திறமையை வெளிப்படுத்தினார். இருந்தாலும் ரிஷப் பண்ட் எழுச்சி கேஎல் ராகுலுக்கு தொந்தரவை கொடுத்துள்ளது. ஏனென்றால் ஒரேயொரு செஷனில் ரிஷப் பண்ட் மொத்த ஆட்டத்தையும் இந்தியா பக்கம் திருப்பிவிடுவார்.
டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் இருந்தாலும், மிடில் ஆர்டரில் அவருக்கு நிரந்தர வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, நம்பர் 4 பேட்டிங் வரிசையில் களமிறங்கி ஆச்சரியம் கொடுத்தார். அட்டாக், டிஃபென்ஸ் என்று இரண்டிலும் சிறப்பாக செயல்படக் கூடிய கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்கியது அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது.
ஏனென்றால் விராட் கோலிக்கு பின் டெக்னிக்கலாக சிறந்த இந்திய பேட்ஸ்மேன் என்பதால் அது கேஎல் ராகுல் தான். இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 111 பந்துகளை எதிர்கொண்ட கேஎல் ராகுல் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய அவரை வாஷிங்டன் சுந்தர் தனது சுழலால் ஏமாற்றி போல்டாக்கினார். தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சீட்டுக் கட்டை போல் சரிய, குல்தீப் யாதவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பை விரைவுப்படுத்தினார்.
சிறப்பாக ஆடிய அவர் 121 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். தனியாளாக போராடி அரைசதம் விளாசிய கேஎல் ராகுலின் ஆட்டத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்தியா ஏ அணிக்காக இரு இன்னிங்ஸ்களிலும் அதிக ரன்களை கேஎல் ராகுல் தான் விளாசி இருக்கிறார். இதனால் கேஎல் ராகுல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்ஃபராஸ் கானுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.