6 செஞ்சுரி.. இந்திய அளவில் நம்பர் 1 ஆன ரிஷப் பண்ட்.. இதுவரை அடித்த சதங்கள் பட்டியல்
சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்தார். சுமார் 634 நாட்களுக்குப் பின் அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் அவர் நீண்ட இடைவேளைக்கு பின் தான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை தோனியுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இதில் சிறப்பான விஷயம் என்னவெனில் ரிஷப் பண்ட் அடித்த ஆறு சதங்களில் நான்கு, வெளிநாடுகளில் கிடைத்தவை என்பதுதான். அந்த சதங்களின் காரணமாகவே அவருக்கு இந்திய அணியில் நிரந்தர விக்கெட் கீப்பராக வாய்ப்பு அளிக்கப்பட்டும் இருக்கிறது.

இந்திய அணி எப்போதெல்லாம் இக்கட்டான சமயங்களில் இருக்கிறதோ அப்போதெல்லாம் ரிஷப் பண்ட் அதிரடியாக ரன் குவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவரது தனித்துவமான பேட்டிங் திறன் தான் அவருக்கான வாய்ப்பையும் அளித்திருக்கிறது.
இந்த நிலையில், அவர் அடித்த ஆறு டெஸ்ட் சதங்களை குறித்து பார்க்கலாம். தனது முதல் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்து இருந்தார். 2018இல் ஓவல் மைதானத்தில் நடந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் 114 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து 2019ஆம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் சேர்த்து இருந்தார். அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 2021ஆம் ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் 101 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2022 இல் கேப் டவுன் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்க்ஸில் 100 ரன்கள் எடுத்து இருந்தார்.
2022 இல் பிர்மிங்ஹாமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 146 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து வங்கதேச அணிக்கு எதிராக 109 ரன்களை எடுத்து இருக்கிறார். இதை தவிர்த்து ஐந்து முறை ரிஷப் பண்ட் 90 ரன்களுக்கும் அதிகமாக ரன் சேர்த்த பின் ஆட்டம் இழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2569 ரன்களை சேர்த்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 45 ஆக உள்ளது. 6 சதம் மற்றும் 11 அரை சதங்களை அடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications