சென்னை: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான போது இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங்கின் இடத்தை நிரப்ப முடியுமா என்று பலரும் சந்தேகம் கொண்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் எமோஷனலாக கூறியுள்ளார். தற்போது இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் எட்டியுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வால்ஷின் சாதனையான 519 விக்கெட்டுகளை முறியடித்துள்ள அஸ்வின், 522 விக்கெட்டுகளுடன் 8வது இடத்தில் இருக்கிறார். இந்த சீசனில் மட்டும் இன்னும் 9 போட்டிகளில் அஸ்வின் விளையாட வாய்ப்புகள் உள்ளது.

இதனால் எளிதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் மெக்ராத்தின் சாதனையை அஸ்வின் விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்களில் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக 10வது முறையாக அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார். இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், இந்த டெஸ்ட் போட்டியில் எனது தாக்கம் குறித்து நானே பேசக் கூடாது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் போது, எனக்கு மிகப்பெரிய வீரரின் இடத்தை நிரப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஜூனியர் கிரிக்கெட் விளையாடிய போது, அவரின் பவுலிங் ஆக்ஷனில் ஏராளமான முறை பயிற்சி செய்துள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் மிகப்பெரிய ஊக்கமாக இருந்துள்ளார். ஹர்பஜன் சிங்கின் இடத்தை நிரப்புவது எளிதாக இல்லை. ஏனென்றால் பலருக்கும் என்னால் ஹர்பஜன் சிங்கின் இடத்தை நிரப்ப முடியுமா என்று தொடர்ந்து சந்தேகம் எழுந்து கொண்டே இருந்தது.
ஏனென்றால் ஐபிஎல் தொடரில் இருந்து நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினேன். அந்த நேரத்தில் எனக்கு உதவியாக பலரும் உடனிருந்தனர் என்று தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அஸ்வினின் திறமையை நேரில் பார்த்த தோனி, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் வாய்ப்பு தந்தார்.
2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமானாலும், சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது அஸ்வினின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் தோனி அஸ்வினை நிரந்தர வீரராக கொண்டு வந்து தொடர்ந்து வாய்ப்பு அளித்தார். அங்கிருந்து ஜடேஜாவும் இணைந்து கொள்ள இருவரும் இணைந்து இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர்கள் கூட்டணியாக உயர்ந்துள்ளனர்.