மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக இருந்த முகேஷ் குமாருக்கு கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாதியில் அணியில் இடம் மறுக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் விக்கெட் வேட்டையாடி வந்த அவர் ஆகாஷ் தீப்-பை பின் தள்ளி டெஸ்ட் அணியில் தனது இடத்தை பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த துலீப் டிராபி உள்ளூர் டெஸ்ட் தொடரில் முகேஷ் குமார் விளையாடி இருந்தார். அதை தொடர்ந்து தற்போது இரானி கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். முன்னதாக துலீப் டிராபி தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் மூன்றிலும் தலா ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது இரானி கோப்பை போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இரானி கோப்பை போட்டியில் மும்பை அணி 537 ரன்கள் குவித்தது. சர்ஃபராஸ் கான் 222 ரன்கள் குவித்தார். மும்பை அணி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய போதும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக பந்து வீசிய முகேஷ் குமார் 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அவர் நான்கு உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஏழு இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம், இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆகாஷ் தீப் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
மேலும், மாற்று வேக பந்துவீச்சாளராக யாஷ் தயாள் அணியில் இடம் பெற்று இருந்தார். இவர்கள் இருவருக்கும் அடுத்ததாக முகேஷ் குமாருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இந்திய அணி அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் ஒரு போட்டியிலாவது ஆகாஷ் தீப்புக்கு ஓய்வு அளித்துவிட்டு முகேஷ் குமாரை ஆட வைக்க வாய்ப்பு உள்ளது.
அதன் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான அணியில் ஆகாஷ் தீப் மற்றும் முகேஷ் குமார் இடையில் யாரை தேர்வு செய்வது என்ற விவாதம் இருக்கக்கூடும். அந்த வகையில் முகேஷ் குமார் உள்ளூர் ப்[போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அணியில் தனக்கான இடத்தை பெற கடும் முயற்சி எடுத்து இருக்கிறார்.