மும்பை: இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் ரவி பிஷ்னோய் தற்போது நடைபெற்று வரும் வங்கதேச டி20 தொடரில் இதுவரை எந்த போட்டியிலும் விளையாடவில்லை. அவர் மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருக்கிறார். ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1 டி20 பந்து வீச்சாளராக டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.
தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் கவுதம் கம்பீரின் ஆதரவு பெற்ற வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்து உள்ளது. வருண் சக்கரவர்த்தியும், ரவி பிஷ்னோய் போன்றே மூன்று ஆண்டுகளாக வாய்ப்பு இன்றி தவித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவி பிஷ்னோய் இதுவரை 32 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவரது எகானமி ஒரு ஓவருக்கு 7.29 என்பதாக இருக்கிறது. டி20 போட்டியை பொறுத்தவரை இந்த எகானமியுடன், விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சாளர் சிறந்த பந்துவீச்சாளராகவே கருதப்படுகிறார்.
ஆனாலும், ரவி பிஷ்னோய்க்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. வங்கதேச டி20 தொடரில் மூன்று போட்டிகள் உள்ளன. அதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்து உள்ளன. மீதமுள்ள ஒரு போட்டியிலாவது ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் திடீரென வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டார். அவர் மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு இன்றி தவித்து வந்தார். அவருக்கு வாய்ப்பு வழங்கியது நியாயம் தான். அதே சமயத்தில் ரவி பிஷ்னோய்க்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது வங்கதேச டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் பிளேயிங் லெவனில் சுழற் பந்துவீச்சாளர்களாக உள்ளனர். மூன்றாவது போட்டியில் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால் அவர்கள் இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும்.
வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்யும் ஆல் ரவுண்டராகவும் இருப்பதால் அவருக்கு ஓய்வு அளிப்பது சாத்தியமில்லை. எனவே, வரும் சக்கரவர்த்திக்கு ஓய்வு அளித்தால் மட்டுமே ரவி பிஷ்னோய் இந்திய அணியில் இடம் பெற முடியும். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.