சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து அபாரமாக ஆடி வருகிறார். அவர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 112 பந்துகளுக்கு 102 ரன்கள் அடித்து இருந்தார். அவர் ஆட்டம் இழக்காமல் இருக்கும் நிலையில் இரண்டாவது நாளில் அவர் இரட்டை சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பார்க்கலாம்.
முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் 118 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். ரோஹித் சர்மா 6, சுப்மன் கில் 0, விராட் கோலி 6, கே எல் ராகுல் 16, ரிஷப் பண்ட் 39 ரன்கள் எடுத்து வரிசையாக ஆட்டம் இழந்தனர். வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹசன் மஹ்முத் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

இந்திய அணி 144 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து ஏழாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்துள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன்கள் எடுத்து இருக்கிறார். ஜடேஜா 117 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இருவரும் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் சைவசம் தற்போது நான்கு விக்கெட்கள் உள்ளன. இந்த நிலையில் அஸ்வின் இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்றால் ஜடேஜா நீண்ட நேரம் ஆட்டம் இழக்காமல் அவருடன் களத்தில் இருக்க வேண்டும். ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை அடித்து இருக்கிறார்.
இதற்கு முன் அவர் நான்கு சதங்களை அடித்து இருந்தாலும், அதிகபட்சமாக 124 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். எனவே, அவர் 150 ரன்களை தாண்டினாலே அது பெரிய சாதனையாக இருக்கும். அஸ்வின் ஆட்டமிழக்கும் முன்பே இந்திய அணி டிக்ளர் செய்யவும் வாய்ப்பு இல்லை. இந்திய அணி நிச்சயம் முதல் இன்னிங்ஸில் 600 ரன்களை தாண்டும் வரை டிக்ளர் செய்யாது.
அத்தனை ரன்கள் அடிக்க முடியுமா? என்பதும் சந்தேகமே. எனவே, முதல் இன்னிங்க்ஸில் இந்தியா டிக்ளர் செய்ய வாய்ப்பு இல்லை. ஜடேஜா ஆட்டம் இழக்காமல் இருக்கும் பட்சத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரட்டை சதத்தை நோக்கி ஆட முடியும். ஒருவேளை ஜடேஜாவின் விக்கெட் வீழ்ந்து விட்டால் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் மட்டுமே அடுத்து பேட்டிங் செய்வார்கள்.
அவர்களால் நீண்ட நேரம் தாக்கு பிடிக்க முடியாது என்பதால் அப்போது ரவிச்சந்திரன் அஸ்வினால் இரட்டை சதம் அடிக்க முடியாமல் போகும். எனினும், இந்தியா 400 ரன்களை தாண்டி ரன் குவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதலில் இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் எடுத்த 448 ரன்களை தாண்டி 525 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அது போன்ற சம்பவம் இந்த போட்டியிலும் நடக்கலாம் என்பதால் இந்திய அணி 500 ரன்களை தாண்டி ரன் குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் ஆட்டத்தால் மட்டுமே இந்திய அணியால் 500 ரன்கள் குவிக்க முடியும்.