சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணியின் ஷான்டோ - ஷகிப் அல் ஹசன் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்த போது, இந்திய பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். 12 ஓவர்களுக்கு பின் அஸ்வின் கைகளில் பந்தை கொடுத்த போது, அசால்ட்டாக ஷகிப் அல் ஹசன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 3வது நாள் ஆட்டம் நேர முடிவில் வங்கதேசம் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. வங்கதேசம் அணியின் வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக இருந்தது.

இதன்பின் 4வது நாள் ஆட்டத்தை சிராஜ் தொடங்கி வைத்தார். நேற்றைய நாளின் இறுதியில் கடைசி ஓவர் முடிவதற்கு முன்பாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டதால், இன்று அந்த ஓவரை வீசி முடித்தார். இதன்பின் பும்ரா அட்டாக்கில் வர, வங்கதேசம் அணியின் ஷான்டோ - ஷகிப் அல் ஹசன் இருவரும் நிதானமாக எதிர்கொண்டனர். இருவரையும் சாதுர்யமாக எதிர்கொண்டதால், இந்திய அணியால் விக்கெட் எடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் பும்ரா ஸ்பெல் முடிவடைந்த பின், ஜடேஜா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அப்போது ஜடேஜாவை அட்டாக் செய்யும் முனைப்பில் ஷகிப் அல் ஹசன் சில பவுண்டரிகளை விளாசினார். இதனால் 4வது நாளின் முதல் 12 ஓவர்கள் வரை இந்திய பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து டிரிங்ஸ் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக அஸ்வின் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அதற்கு ஏற்ப ஸ்ட்ரைக்கில் இடதுகை பேட்ஸ்மேனான ஷகிப் அல் ஹசன் இருந்தார். முதல் 3 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் இருந்த நிலையில், 4வது பந்தில் அஸ்வின் பந்தில் ஷகிப் அல் ஹசன் 56 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் காரணமாக 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் உடைக்கப்பட்டது. அஸ்வின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு சாதகம் கொடுத்துள்ளார். தொடர்ந்து அஸ்வின் - ஜடேஜா இருவரும் சேர்ந்து அட்டாக் செய்த போது, அதிரடி வீரர் லிட்டன் தாஸை 1 ரன்னில் ஜடேஜா பெவிலியனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் வங்கதேசம் அணி 205 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வந்தது.
பின்னர் வந்த மெஹதி ஹசன் 8 ரன்கள் எடுத்திருந்த போது, அஸ்வின் பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து ஜடேஜா கைகளில் கேட்ச் கொடுத்தார். இதன் மூலமாக அஸ்வின் தனது 5வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 37வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.