சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் 108 பந்துகளில் சதம் விளாசி தரமான சம்பவம் செய்துள்ளார். சொந்த மண்ணில் ஆடி வரும் அஸ்வினின் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கரகோஷம் எழுப்பிய ரசிகர்கள், அஸ்வின் சதம் அடித்த பின் எழுந்து நின்று கைகளை தட்டினர்.
ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி ஒயிட் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்த நிலையில், நட்சத்திர வீரரான அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஓய்வு நேரத்தில் ஓய்வு எடுக்காமல் டிஎன்பிஎல் தொடரில் முழுமையாக விளையாடினார். திண்டுக்கல் அணிக்காக நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்த அஸ்வின், பிளே ஆஃப் சுற்றில் ஹாட்ரிக் அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.

மொத்தமாக 8 இன்னிங்ஸில் விளையாடி 200 ரன்களை விளாசினார். அதில் குறிப்பாக பார்க்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 166.67 என்பது தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 38 வயதிலும் தனது பேட்டிங்கில் முன்னேற்றமடைய வேண்டும் என்று அஸ்வின் செயல்பட்டது அவரை தனித்துவமாக்கியது.
இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில், இந்திய அணி முதல் ஒரு மணி நேரத்திலேயே 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோஹித் சர்மா 6 ரன்களிலும், சுப்மன் கில் டக் அவுட்டாகியும், விராட் கோலி 6 ரன்களிலும் வெளியேறினர்.
இதன்பின் ஜெய்ஸ்வால் - ரிஷப் பண்ட் இருவரும் உணவு இடைவேளை வரை நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். பின்னர் ரிஷப் பண்ட் 39 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும், கேஎல் ராகுல் 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் சேப்பாக்கத்தின் சிங்கங்களான ஜடேஜா - அஸ்வின் கூட்டணி களத்தில் இணைந்தது. இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அஸ்வின் களமிறங்கியது முதலே பவுண்டரிகளாக விளாசி வெளுத்து கட்டினார். அதிலும் ஷகிப் அல் ஹசன் வீசிய ஓவரில் அபாரமாக ஒரு சிக்சரை விளாச, இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது.
சிறப்பாக ஆடிய அஸ்வின் 58 பந்துகளில் ஒரு சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட அரைசதத்தை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் அடிக்கும் 15வது அரைசதம் இதுவாகும். இதன்பின் அஸ்வினின் அதிரடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. இன்னொரு பக்கம் ஜடேஜாவும் அதிரடியில் மிரட்ட, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டிய அஸ்வின், அப்பர் கட், ஸ்வீப் ஷாட் என்று வித்தியாசமான ஷாட்களை ஆடி பவுண்டரிகளை விளாசினார்.
இதனால் விரைவாக 90 ரன்களை கடந்த அஸ்வின், அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி, 99 ரன்களுக்கு சென்றார். அப்போது ஷகிப் அல் ஹசன் பவுலிங்கில் ஒரு ரன் எடுக்க, அஸ்வின் தனது 6வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். சொந்த மண்ணில் அஸ்வின் சதமடித்ததால், சென்னை ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது. அதேபோல் இந்திய அணி வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டினர். 108 பந்துகளில் 2 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 100 ரன்களை விளாசினார் அஸ்வின். இதன் மூலமாக அஸ்வினின் ஹோம் சீசன் அட்டகாசமாக தொடங்கியுள்ளது.