கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். அது அவரது 300-வது டெஸ்ட் விக்கெட் ஆக அமைந்தது. இதன் மூலம், அவர் பல்வேறு சாதனைகளை உடைத்து எறிந்து இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அடுத்ததாக மிக விரைவாக 300 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அவர் இந்த இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய நிலையில், அது அவரது 300 வது டெஸ்ட் விக்கெட்டாக அமைந்தது.

அதன் மூலம் இந்திய அளவிலும், ஆசிய அளவிலும், உலக அளவில் பல்வேறு சாதனைகளை அவர் படைத்திருக்கிறார். ஆல் ரவுண்டராகவும் பல சாதனை பட்டியல்களில் இடம் பெற்று இருக்கிறார் ஜடேஜா. 300 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய ஏழாவது இந்திய பந்து வீச்சாளர் ஆவார் ஜடேஜா. மேலும், குறைந்த பந்துகளில் 300 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்களின் வரிசையில் அஸ்வினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
அஸ்வின் 15,636 பந்துகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ரவீந்திர ஜடேஜா 17,428 பந்துகளில் 300 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 3122 ரன்கள் அடித்திருக்கிறார். அதன் மூலம் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய ஆல் ரவுண்டர் என்ற முத்திரையை பதித்திருக்கிறார். முன்னதாக கபில் தேவ் (5248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்கள்), ரவிச்சந்திரன் அஸ்வின் (3422 ரன்கள் மற்றும் 524 விக்கெட்கள்) இந்த சாதனையை செய்து இருந்தனர்.
தற்போது ரவீந்திர ஜடேஜா 3122 ரன்கள் மற்றும் 300 விக்கெட்களை எட்டி இந்த பட்டியலில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளார். மேலும், ஆசிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களுக்கும் அதிகமாக ரன் குவித்து, 300 விக்கெட்களை விரைவாக எட்டிய முதல் ஆல் ரவுண்டர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இதே பட்டியலில், உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இயான் போத்தம் 72 போட்டிகளில் 3000க்கும் அதிகமான ரன்கள் மற்றும் 300க்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அதற்கு அடுத்து ரவீந்திர ஜடேஜா தற்போது 74 டெஸ்ட் போட்டிகளில் 3000க்கும் அதிகமான ரன்கள் மற்றும் 300க்கும் அதிகமான விக்கெட்களை எட்டி இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார். மேலும், இந்திய அளவில் 300 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய ஒரே இடது கை சுழற் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ரவீந்திர ஜடேஜா பெற்று இருக்கிறார்.
இந்திய அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஜடேஜா ஏழாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.