டெஸ்ட் கிரிக்கெட்டில் 6வது சதம்.. சேப்பாக்கத்தில் வைத்தே தோனி ரெக்கார்டை முடித்துவிட்ட ரிஷப் பண்ட்!
சென்னை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சமன் செய்து அசத்தியுள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் வைத்தே தோனியின் சாதனையை சமன் செய்துள்ள ரிஷப் பண்ட்-க்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 124 பந்துகளில் சதம் அடித்து சம்பவம் செய்துள்ளார். 632 நாட்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரிஷப் பண்ட், கம்பேக் போட்டியிலேயே சதமடித்து மரண மாஸ் காட்டியுள்ளார். சிறப்பாக ஆடிய அவர் 88 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அதன்பின் கியரை மாற்றிய ரிஷப் பண்ட் ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸ், பவுண்டரி என்று விளாச தொடங்கினார். வங்கதேசம் அணியும் வேறு வழியில்லாமல் மெஹதி ஹசன் மற்றும் ஷகில் அல் ஹசன் இருவரையும் அட்டாக்கில் கொண்டு வர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இதற்காகவே காத்திருந்த ரிஷப் பண்ட், லாங் ஆன் மற்றும் லாங் ஆஃப் திசையில் ஃபீல்டர்கள் இருந்தும் கவலையின்றி சிக்சர்களை விளாசினார்.
இதன் காரணமாக 124 பந்துகளில் ரிஷப் பண்ட் தனது 6வது டெஸ்ட் சதத்தை எட்டியுள்ளார். முதல் அரைசதத்தை 88 பந்துகளில் எட்டிய ரிஷப் பண்ட், அடுத்த அரைசதத்தை வெறும் 36 பந்துகளில் எட்டியிருக்கிறார். இதன் மூலமாக ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய வீரராக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் தோனிக்கு பின் சதம் விளாசிய முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்துள்ள விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார். இந்திய ஜாம்பவான் தோனி 144 இன்னிங்ஸ்களில் விளையாடி 6 சதங்களை அடித்துள்ளார்.
ஆனால் ரிஷப் பண்ட் 58 இன்னிங்ஸ்களிலேயே 6வது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் வைத்தே தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்திருப்பது தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. ரிஷப் பண்ட் சதம் விளாசிய பின் சேப்பாக்கம் மைதான ரசிகர்கள் எழுந்து நின்று கைகளை தட்டி உற்சாகப்படுத்தினார். இறுதியாக ரிஷப் பண்ட் 128 பந்துகளில் 4 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.


Click it and Unblock the Notifications