கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடி 3 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை யாரும் ஆடியதில்லை. மேலும், 40 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை முறியடித்து இருக்கிறது இந்த கூட்டணி.
இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் மூன்று நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்கள் எடுத்து இருந்தது. ஒன்றரை நாள் ஆட்டம் மட்டுமே மீதம் இருந்த நிலையில் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்திய அணி.

இந்த நிலையில் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் சேர்க்க முடிவு செய்தனர். முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் ஹாட்ரிக் ஃபோர் அடித்தார். முதல் ஓவரிலேயே 12 ரன்கள் கிடைத்தன. அடுத்து இரண்டாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ரோஹித் சர்மா இரண்டு சிக்ஸர்களை அடித்து மிரள வைத்தார். அப்போது இந்திய அணி டி20 போட்டியை மிஞ்சிய அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தது. இரண்டாவது ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது.
அடுத்த மூன்றாவது ஓவரில் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸ் அடித்தார். ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸ் மற்றும் இரண்டு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தன. மூன்று ஓவர்களில் இந்திய அணி 51 ரன்களை எட்டியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 ரன்களை எட்டிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
40 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அணி 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இருந்ததே உலக அளவில் சாதனையாக இருந்தது. அதை தற்போது முறியடித்து இருக்கும் இந்திய அணி 18 பந்துகளில் 50 ரன்களை கடந்து சாதனை படைத்தது. மேலும், மூன்று ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ரன் ரேட் 17 ஆக இருந்தது. டி20 போட்டியில் கூட இந்த ரன் ரேட்டில் ரன் குவிப்பது என்பது கடினமான விஷயமாகும்.
ஆனால், டெஸ்ட் போட்டியிலேயே ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடி ஆட்டம் ஆடி மிரட்டியது. வங்கதேச வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். பின்னர் நான்காவது ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்தார். அவர் 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார். மூன்று சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்து இருந்தார்.
அதன் பின் ஜெய்ஸ்வால் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினார் டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்கள் அதிகமாக ரன் சேர்த்த கூட்டணிகளில் அதிக ரன் ரேட் கொண்ட கூட்டணியாக ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா கூட்டணி இருந்தது. இவர்கள் 23 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து இருந்தார்கள். ஒரு ஓவருக்கு சராசரியாக 14.34 ரன்களை இந்த ஜோடி சேர்த்து இருந்தது.
முன்னதாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் டக்கெட் ஜோடி 2024 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 44 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து இருந்தது. அதன் மூலம் 11.86 என்ற ரன் ரேட்டில் ஆடி அதிக ரன் ரேட்டில் ரன் குவித்த கூட்டணியாக இருந்தது. அந்த சாதனையையும் ஜெய்ஸ்வால் - ரோஹித் ஜோடி முறியடித்து உள்ளது.
ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பின் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 10.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அதிவேக 100 ரன்களாகவும் அமைந்தது. இதற்கு முன் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2023இல் 12.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்து இருந்ததே டெஸ்ட்டில் அதிவேக 100 ரன்களாக இருந்தது. அந்த சாதனையையும் இந்தியா முறியடித்து உள்ளது.