மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறார். 37 வயதாகி இருக்கும் ரோகித் சர்மா ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறுகிறது.
ரோகித் சர்மா, 50 ஓவர் உலக கோப்பையை இறுதிப்போட்டி வரை வந்து தவறவிட்ட நிலையில் டி20 உலக கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இறுதிப்போட்டி வரை வந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை கடந்த முறை தழுவி இருக்கிறது.

இந்த சூழலில் மீண்டும் இந்தியா பைனலுக்கு செல்ல ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எஞ்சிருக்கும் 10 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் பைனலுக்கு செல்ல முடியும். அதிலும் இந்தியா விளையாடப் போகும் அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் தங்களது சொந்த மண்ணில் நடைபெறுவதால் இதில் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த சூழலில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் மற்ற வீரர்கள் தற்போது சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறி வருகிறார்கள். இதனால் ரோகித் சர்மா தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடக்கத்தில் வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றார். ரோகித் சர்மா இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4137 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் 12 சதங்கள், 17 அரை சாதங்கள் அடங்கும். அது மட்டுமில்லாமல் ரோகித் சர்மா இந்தியாவில் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2042 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 10 சதம், 7 அரை சதங்கள் அடங்கும். இந்த சூழலில் ரோகித் சர்மா வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் அடித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 10 சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இந்த பட்டியலில் 16 சதங்கள் அடித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சேன் 11 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், வில்லியம்சன் 10 சதங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதேபோன்று ரோகித் சர்மா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 48 சதங்கள் அடித்து இருக்கிறார். இந்த சூழலில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 100 சதம், விராட் கோலி 80 சதம் அடித்து இந்த பட்டியலில் முதல் 2 இடத்தில் இருக்கிறார்கள். இதேபோன்று ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 84 சதம் அடித்திருக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
இந்த சூழலில் வங்கதேசத்துக்கு எதிராக 8 சிக்சர்களை ரோகித் சர்மா விளாசினால் முதலிடம் பிடித்த சேவாக்கின் சாதனையை முறியடித்து விடுவார். இதேபோன்று 16 சிக்சர்களை ரோகித் சர்மா அடித்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமை ரோகித் சர்மாவை சேரும்.