மும்பை : இந்தியா, வங்கதேசம் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. வங்கதேச அணி தற்போது பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலே சென்று வீழ்த்திய உத்வேகத்துடன் தற்போது இந்தியாவை எதிர்கொள்கிறது.
இதனால் வங்கதேச அணியை இந்தியா சாதாரணமாக எண்ணி விட முடியாது. எனினும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேச அணி இதுவரை இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை. இதற்கு முன்பு 13 போட்டிகள் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நடைபெற்றிருக்கிறது.

இதில் 11 போட்டிகளில் இந்திய அணி வெற்றியும் இரண்டு போட்டிகளில் டிராவும் அடைந்திருக்கிறது. இதுவரை ஒரு போட்டியில் கூட இந்தியா தோல்வியை தழுவியது இல்லை. இந்த நிலையில் இந்தியாவும் வங்கதேசமும் கடந்த 20223 ஆம் ஆண்டு விளையாடியது. இதில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரு அணிகளும் மோத உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான்.
சச்சின் டெண்டுல்கர் 7 போட்டிகளில் ஒன்பது இன்னிங்ஸ்களில் வங்கதேசத்துக்கு எதிராக 820 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இதில் ஐந்து சதம் அடங்கும். வங்கதேசத்துக்கு எதிராக சச்சினின் சராசரி 136 என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை வங்கதேச வீரர் முஸ்பிகுர் ரஹீம் பெற்றிருக்கிறார்.
முசுபிக்ர் ரஹீம் இதுவரை இந்தியாவுக்கு எதிராக எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 604 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம் அடங்கும். இந்த சூழலில் இன்னும் 217 ரன்கள் அடித்தால் அவர் சச்சினை முந்தி நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் முசுபிக் ரஹீம் 4 இன்னிங்ஸில் விளையாடி 217 ரன்களுக்கு மேல் அடித்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். டிராவிட், ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாடி 560 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதங்கள் அடங்கும். நான்காவது இடத்தில் புஜாரா இருக்கிறார். அவர் வங்கதேசத்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 468 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் விராட் கோலி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
கோலி, வங்கதேசத்துக்கு எதிராக ஆறு போட்டிகளில் விளையாடி 437 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த சூழலில் புஜாரா இந்திய அணியில் சேர்க்கப்படாத நிலையில் விராட் கோலி தற்போது வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இடம் பிடித்திருக்கிறார். இதனால் விராட் கோலி 500 ரன்கள் என்ற மைல் கல்லை உடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் விராட் கோலி ஒரு இரட்டை சதம் மற்றும் சதம் அடித்தால் அவர் சச்சினின் சாதனையை கூட முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.