ஐதராபாத்: வங்கதேச டி20 தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறிய வார்த்தைகளை இன்று சஞ்சு சாம்சன் செயலில் நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார். அணியை விடவும் வேறு எந்த வீரரும் உயர்வானவர் அல்ல என்பதை இந்திய வீரர்கள் உணர்ந்து செயல்படுவதாக பாராட்டியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 75 ரன்களும் விளாசி அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய மண்ணில் விளையாடிய முதல் டி20 தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றியை பெற்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், இந்த டி20 தொடரில் ஒரு அணியாக ஏராளமான விஷயங்களை சாதித்துள்ளோம். இந்திய அணியில் சுயநலமில்லாத வீரர்கள் தேவை என்று எண்ணினேன். அதேபோல் சக வீரர்களின் வெற்றியை தங்கள் வெற்றியாக கொண்டாடும் வீரர்கள் வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஒரு விஷயத்தை எங்களிடம் கூறினார். அது, இந்திய அணியை விடவும் வேறு எந்த தனிப்பட்ட வீரரும் பெரிதானவர் அல்ல. 49 ரன்களில் இருந்தாலும் சரி.. 99 ரன்களில் இருந்தாலும் சரி.. பந்தை சிக்சருக்கு அனுப்ப வேண்டும். அதனை தான் சஞ்சு சாம்சன் இன்றைய இன்னிங்ஸில் செய்தார்.
பேட்டிங் மற்றும் பவுலிங்கை பொறுத்தவரை இந்திய வீரர்கள் எந்த விஷயத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். பவுலர்கள் எந்த சூழலிலும் தயாராக இருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் பேட்டிங் வரிசையை கணக்கில் கொள்ளாமல், பேட்டிங் செய்ய வேண்டும். இந்த வெற்றியை தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். வெற்றி பெறுவதை ஒரு குணமாக இந்திய அணிக்குள் பதிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.