துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் சஞ்சு சாம்சனை முன்வரிசையில் களமிறக்காமல் புறக்கணித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசிய கோப்பைத் தொடர் இம்முறை t20 தொடராக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் சுப்மன் கில், டி20 அணியின் துணை கேப்டனாக களம் இறங்கி இருக்கிறார். தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் விளையாடுவதால் கடந்த சில போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கி மூன்று சதம் அடித்த சஞ்சு சாம்சனுக்கு நடுவரிசையில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

டி20 போட்டி என்பதாலும் அபிஷேக் ஷர்மா மற்றும் கில்தொடக்கப் பார்ட்னர்ஷிப்பை சிறப்பாக செயல்படுவதாலும் இந்திய அணியில் நடுவரிசை வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ஐந்தாவது வீரராக பேட்டிங்கில் களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன் இந்த தொடரில் ஓமன் அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் தான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து அரை சதம் அடித்தார்.
அதன்பிறகு நடு வரிசையில் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில் சாம்சன் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடம் வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த தருணத்தில் வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் ஃபோர் சுற்றில் கில் 29 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அபிஷேக்சர்மா தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். இதனால் மூன்றாவது வீரராக சஞ்சு சாம்சன் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் களத்திற்கு சிவம் துபேவை அனுப்பி பயிற்சியாளர் கம்பீர் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இடது கை பேட்ஸ்மேனாக அபிஷேக் ஷர்மா உள்ள நிலையில் வலது கை பேட்ஸ்மனாக சஞ்சு சாம்சனை அனுப்பி இருக்கலாம்.
இதன் மூலம் சாம்சனுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுத்த மாதிரியாக இருந்திருக்கும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் சிவம் துபேவை அனுப்பி அவர் வெறும் மூன்று பந்துகளை எதிர் கொண்டு இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து நான்காவது வீரராக கேப்டன் சூரியகுமார் யாதவ் களத்திற்கு வந்தார். திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் என ஒவ்வொருவராக பேட்டிங் வர கடைசி வரை சஞ்சு சாம்சன் வரவில்லை. இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு ஏன் இந்திய அணி வாய்ப்பை கொடுப்பதில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் இந்திய அணியில் தேவையில்லாத அரசியல் இருப்பதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.