துபாய்: "கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடி வருகிறேன். என்னால் ஹீரோவாக மட்டுமே நடிக்க முடியும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் நான் ஒரு வில்லனாக இருக்க வேண்டும், ஒரு ஜோக்கராக இருக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்," - இது, 2025 ஆசிய கோப்பை தொடரில் தனது பேட்டிங் வரிசை தொடர்ந்து மாற்றப்படுவது குறித்து எழுந்த கடினமான கேள்விகளுக்கு, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அளித்த உருக்கமான பதில்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்றதிலிருந்து, இந்திய அணி விளையாடிய 17 டி20 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் தான் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அதில் மூன்று சதங்களையும் விளாசி அசத்தினார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில், அவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கப்படவில்லை.
நேற்று நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்ந்த நிலையிலும் சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் இறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு முன் அக்சர் பட்டேல் சென்றார். அக்சர் பட்டேல் 15 பந்தில் 10 ரன்கள் எடுத்து சொதப்பினார். அப்படி சொதப்பினாலும் பரவாயில்லை, சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்பதே இந்திய அணி நிர்வாகத்தின் முடிவாக இருந்தது.

அது மட்டுமல்லாமல், இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் அவருக்கு ஒரு நிலையான பேட்டிங் வரிசையே ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து, வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எழுப்பிய கேள்விக்கு, சஞ்சு சாம்சன் விரக்தியாக அளித்த பதில், தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு முன்பு, சஞ்சு சாம்சனிடம் பேசிய மஞ்ச்ரேக்கர், "எளிமையான கேள்விகள் போதும். கடைசி கேள்வி. நீங்கள் அடித்த மூன்று டி20 சதங்களும் தொடக்க ஆட்டக்காரராக வந்தவைதான். உங்களுக்கு எந்த பேட்டிங் வரிசை மிகவும் வசதியாக உள்ளது?" என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த சஞ்சு சாம்சன், மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலை உதாரணமாகக் கூறினார். "சமீபத்தில், எங்கள் லாலேட்டன் - மோகன்லால், நாட்டிலிருந்து ஒரு பெரிய விருதைப் பெற்றார். அவர் கடந்த 30-40 ஆண்டுகளாக நடித்து வருகிறார். நானும் கடந்த 10 ஆண்டுகளாக என் நாட்டுக்காக விளையாடி வருகிறேன். எனவே, என்னால் ஹீரோவாக மட்டுமே இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. நான் ஒரு வில்லனாக இருக்க வேண்டும், ஒரு ஜோக்கராக இருக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும்."
நான் தொடக்க ஆட்டக்காரராக ரன்கள் குவித்துள்ளேன், டாப் 3-ல் சிறப்பாக ஆடுவேன் என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. இதையும் முயற்சி செய்து பார்ப்போமே. என்னால் ஏன் ஒரு நல்ல வில்லனாக இருக்க முடியாது?" என்று சஞ்சு சாம்சன் பதிலளித்தார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில், சுப்மன் கில் துணை கேப்டனாகத் திரும்பியதால், சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்க மாட்டார் என்பது உறுதியானது. இந்தத் தொடரில், ஓமனுக்கு எதிராக 3-வது இடத்திலும் (56 ரன்கள்), பாகிஸ்தானுக்கு எதிராக 5-வது இடத்திலும் சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், அவர் 8-வது இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கப்பட்டார். இது கிரிக்கெட் விமர்சகர்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டிக்கு முந்தைய நாள் பேசிய இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டென், "சஞ்சுவை நாங்கள் 5-வது இடத்தில் ஆடுவதற்கான சிறந்த வீரர் என நம்புகிறோம்" என்று கூறியிருந்தார். ஆனால், அடுத்த நாளே சஞ்சு சாம்சன் 8-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது, அணி நிர்வாகத்தின் திட்டங்கள் குறித்த குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு வீரராக அணியின் தேவைக்கேற்ப எந்த இடத்திலும் ஆடத் தயாராக இருப்பதாக சஞ்சு சாம்சன் கூறியிருந்தாலும், அவரது திறமையை அணி நிர்வாகம் சரியாகப் பயன்படுத்தவில்லையோ? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.