2வது டெஸ்ட்டில் மாற்று வீரராகக் கூட இடமில்லை.. சர்ஃபராஸ் கானை கழட்டி விட முடிவு.. பிசிசிஐ அதிரடி
மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து சர்ஃபராஸ் கானை விடுவிக்க பிசிசிஐ முடிவு செய்து உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாற்று வீரராக சர்ஃபராஸ் கான் இடம் பெற்று இருக்கிறார். அவருக்கு முதல் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரை இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் தனது 19ஆவது வயதிலேயே இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டவர் தான் சர்ஃபராஸ் கான். ஆனால், அவருக்கு 26 வது வயதில் தான் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. அதுவரை உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடி வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கே எல் ராகுல் காயம் காரணமாக விலகியதால், சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இடம் பிடித்தார். அந்தத் தொடரில் மூன்று போட்டிகளில், மூன்று அரை சதங்களை அடித்து இருந்தார். தற்போது வங்கதேச டெஸ்ட் தொடரில் நடைபெற்று வரும் நிலையில் கே எல் ராகுல் அணிக்கு திரும்பியதால் சர்ஃபராஸ் கானுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அவர் மாற்று வீரராக மட்டுமே இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருந்தார். அவர் முதல் இன்னிங்ஸில் 16 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்களும் மட்டுமே எடுத்தார். எனினும், அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு அளிக்கப்படும் என்பதால் சர்ஃபராஸ் கான் மாற்று வீரராகவே இருப்பார்.
தற்போது இரானி கோப்பை என்ற முக்கியமான உள்ளூர் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையிலான இந்த போட்டியில் சர்ஃபராஸ் கானை ஆட வைக்க பிசிசிஐ முடிவு செய்து உள்ளது. அதற்காக அவரை இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து விடுவிக்கவும் முடிவு எடுத்துள்ளது. இந்திய அணி நிர்வாகமும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதை அடுத்து சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இருந்து விலகி விரைவில் மும்பை மாநில அணியுடன் இணைவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications