IND vs BAN: 21 பந்தில் 45 ரன்.. தலை வணங்கிய விராட் கோலி.. சர்ஃபராஸ் கான் பெருமிதம்
சென்னை: இந்திய டெஸ்ட் அணியில் மாற்று வீரராக இடம் பிடித்துள்ள சர்ஃபராஸ் கான் 9 ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலி உடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். மிக இளம் வயதில் ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றவர் சர்ஃபராஸ் கான். 2015 ஆம் ஆண்டு அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தனது 17 வது வயதில் ஐபிஎல் தொடரில் விளையாடினார்.
அப்போது சின்னசாமி மைதானத்தில் தான் ஆடிய ஒரு போட்டியின் போது 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்ததாகவும் அப்போது விராட் கோலி தனக்கு தலை வணங்கி வாழ்த்து சொன்னதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், விராட் கோலி போட்டிக்கு முன்பே எந்த பந்து வீச்சாளருக்கு எதிராக எத்தனை ரன்கள் எடுப்பேன் என கூறிவிட்டு அதை அப்படியே செய்து காட்டுவார் என கூறி இருக்கிறார்.

விராட் கோலி பற்றி சர்ஃபராஸ் கான் பேசியதாவது - "விராட் கோலியின் ஆர்வம் மற்றும் ஆற்றல் வேறு யாருக்கும் இருக்காது. அவரை நான் போட்டிக்கு முந்தைய கூட்டங்களில் பார்த்தேன். அப்போது எந்த குறிப்பிட்ட பந்து வீச்சாளரின் பந்தில் எத்தனை ரன்கள் எடுப்பேன் என அவர் முன்கூட்டியே அனைவரிடமும் சொல்வார். அப்படி ஒரு விஷயத்தை எழுந்து நின்று அனைவர் முன்பும் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். மேலும், அடுத்த நாள் அதை அவர் செய்து காட்டுவது என்பது தனித்துவமான ஆற்றல்."
"அவரை சின்னசாமி மைதானத்தில் தான் நான் முதன்முறையாக பார்த்தேன். அப்போது நான் 21 பந்துகளில் 45 ரன்கள் அடித்து இருந்தேன். அவர் என் முன்பு தலை வணங்கினார். அன்றைய தினம் நான் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன். இந்திய அணியின் ஓய்வறையை அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது எனது எதிர்கால கனவாக இருந்தது."
"விராட் கோலி அவரது ஆட்டத்தில் எப்போதும் தெளிவாகவே இருப்பார். ஒரு வீரர் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். பாராட்டுக்கள், விமர்சனங்கள் நமது ஆட்டத்தை பாதிக்க கூடாது என்று சொல்வார். "இதுதான் எனது வேலை. நான் காலையில் இதை செய்வேன். மதியம் இதை செய்வேன். மாலை இதை செய்வேன். இந்த நேரத்தில் தான் நான் தூங்குவேன்" என அவர் திட்டமிடுவார். இதை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்" என்று கூறினார் சர்ஃபராஸ் கான்.


Click it and Unblock the Notifications