பெங்களூர்: புச்சி பாபு மற்றும் துலீப் டிராபி ஆகிய இரு தொடர்களிலும் நட்சத்திர இளம் வீரர் சர்ஃபராஸ் கான் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஆட்டமிழந்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 145 ரன்களை மட்டுமே சேர்த்திருப்பதால், வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதே சவாலான விஷயமாக மாறியுள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்.19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு பின் பும்ரா முதல்முறையாக களமிறங்கவுள்ளார்.

இந்த இந்திய அணியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சர்ஃபராஸ் கானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 3 அரைசதம் உட்பட 200 ரன்களை சர்ஃபராஸ் கான் விளாசினார். ஸ்பின்னர்களை அதிரடியாக விளாசக் கூடிய வீரராக சர்ஃபராஸ் கான் இருந்தார்.
இதனால் வங்கதேச டெஸ்ட் தொடரிலும் சர்ஃபராஸ் கானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் திரும்பியுள்ளதால், பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. இதனிடையே சர்ஃபராஸ் கான் துலீப் டிராபியின் 2வது போட்டிக்கு பின் இந்திய அணியுடன் இணைந்தால் போதும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனால் இந்திய அணியின் பயிற்சி முகாமை சர்ஃபராஸ் கான் மிஸ் செய்துள்ளார். புதிய பயிற்சியாளர்களான கவுதம் கம்பீர், மோர்கல், அபிஷேக் நாயர் உள்ளிட்டோரின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை சர்ஃபராஸ் கானால் அறிய முடியாமல் போயுள்ளது. இதனிடையே சர்ஃபராஸ் கான் பேட்டிங்கில் தொடர்ந்து மோசமாக விளையாடி ஃபார்மை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த புச்சி பாபு தொடரில் மும்பை அணியின் கேப்டனாக விளையாடிய போதும், சர்ஃபராஸ் கான் எதிர்பார்த்த அளவிற்கான ரன்களை சேர்க்கவில்லை. அதேபோல் துலீப் டிராபியில் 3 இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். கடந்த 7 இன்னிங்ஸ்களில் சர்ஃபராஸ் கான் 16, 46, 9, 0, 6, 29 மற்றும் 37 என்று மொத்தமாக 145 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது தான். ஏனென்றால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சர்ஃபராஸ் கானின் ஆட்டம் எப்போதும் மிகச்சிறப்பாக இருக்கும். சர்ஃபராஸ் கான் அரைசதம் அடிப்பதெல்லாம் சாதாரண விஷயமாக இருந்து வந்த காலம் உண்டு. அப்படி ரன்களை குவித்ததால் தான், அவரால் இந்திய அணியின் கதவுகளை உடைத்து கொண்டு இடம்பிடிக்க முடிந்தது.
ஆனால் தற்போது துலீப் டிராபியிலேயே மோசமாக ஆடியிருக்கிறார். ஏற்கனவே வங்கதேசம் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு கிடைப்பது அரிதான விஷயமாக உள்ளது. தற்போது சர்ஃபராஸ் கான் பேட்டிங் ஃபார்மை இழந்து நின்றால், தேர்வுக் குழு அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.