ஆன்டிகுவா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் உலகின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பையில் மட்டும் 50 விக்கெட்களை வீழ்த்தி மைல்கல் சாதனை படைத்தார். அவர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி இந்த மைல்கல் சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
இதில் ரோஹித் சர்மா மற்றும் ஷகிப் அல் ஹசனுக்கும், டி20 உலகக் கோப்பைக்குமான முடிச்சு ஒன்று உள்ளது. 2007 ஆம் ஆண்டு முதன்முதலாக டி20 உலகக் கோப்பை தொடர் அறிமுகமானபோது அதில் ரோஹித் சர்மா மற்றும் ஷகிப் அல் ஹசன் இடம் பெற்று இருந்தனர். அதன் பின் நடந்த ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்த இரண்டு வீரர்களும் இடம்பெற்று வந்தனர்.

2024 டி20 உலகக் கோப்பை தொடரிலும் அவர்கள் பங்கேற்று உள்ளனர். அதன் மூலம் இதுவரை நடந்த அனைத்து டி20 உலகக் கோப்பைகளிலும் ஆடிய வீரர்கள் இவர்கள் இருவர் மட்டுமே என்ற பெருமையை பெற்றனர். இவர்களுடன் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆடிய மற்ற வீரர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த நிலையில் 42 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடி உள்ள ஷகிப் அல் ஹசன் அதில் 50 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். விதியின் பயனாக தன்னுடன் டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான ரோஹித் சர்மா விக்கெட்டையே அவர் ஐம்பதாவது விக்கெட்டாக வீழ்த்தி இருக்கிறார்.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடியாக ஆடிய விராட் கோலி 28 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் சிக்ஸ் அடித்து, அதற்கு அடுத்த பந்தில் விக்கெட்டை பறி கொடுத்தார். ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.