டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே வராதீங்க.. ஸ்ரேயாஸ் ஐயர் கதை முடிந்தது.. அஜித் அகர்கர் வைத்த வேட்டு!
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படுவதற்கு பரிசீலனை கூட செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் துலீப் டிராபி தொடரில் வெளிப்படுத்திய மோசமான ஆட்டமே காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டாலும், அப்போதும் பேட்டிங்கில் ஏமாற்றினார். இதன்பின் அவர் உடனடியாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

ஆனால் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாமல் காயம் என்று ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தில்லாலங்கடி வேலையால் தேர்வு குழுவினர் அதிருப்தியடைந்தனர். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் ஐபிஎல் தொடரை வென்றதன் மூலமாக தேர்வு குழுவினரின் மனதில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பிடித்தார். இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். இந்த தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமாக விளையாடிய நிலையில், துலீப் டிராபி தொடரில் இந்தியா டி அணியின் கேப்டனாக வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 4 இன்னிங்ஸ்களில் 9, 54, 1 மற்றும் 41 என்று மொத்தமாக 105 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்திய 2 போட்டிகளிலும் இந்தியா டி அணி தோல்வியடைந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியையும் தேர்வு செய்வது ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கப்பட கூட இல்லை என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு பதிலாக இந்திய அணியின் இளம் வீரர்களான சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரெல், அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் இனி ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நெருங்கி வரும் சூழலில், ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் மீது கூடுதல் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications