சென்னை: இந்திய கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்து சிறந்த வீரர் என சொல்லும் அளவிற்கு யார் இருக்கிறார்கள்? என்ற விவாதம் அவ்வப்போது நடந்து வருகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு அடுத்த தலைமுறை வீரராக சுப்மன் கில் உருவெடுத்து இருக்கிறார். அதற்கான புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் 2011 முதல் 2020 வரையிலான 10 ஆண்டு காலத்திற்கு விராட் கோலி ஆதிக்கம் செலுத்தினார். அவர் உலக அளவிலும், இந்திய அளவிலும் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். அவருக்கு அடுத்து ரோஹித் சர்மா இந்திய அளவில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். அடுத்த பத்து ஆண்டு கால துவக்கமான 2021 வது ஆண்டு முதல் தற்போது வரையிலான கட்டத்திலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அதிக ரன் குவித்த இந்திய வீரர்களாக உள்ளனர்.

அவர்களுக்கு அடுத்து மூன்றாவதாக சுப்மன் கில் இருக்கிறார். அவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட அதிக சராசரியில் ரன் குவித்து இருக்கிறார். அதன் மூலம் இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் மாறி இருக்கிறார். 2021 முதல் தற்போது வரையில் ரோஹித் சர்மா 148 இன்னிங்ஸ்களில் 5527 ரன்கள் சேர்த்துள்ளார். விராட் கோலி 149 இன்னிங்ஸ்களில் 5521 ரன்கள் சேர்த்துள்ளார். சுப்மன் கில் 114 இன்னிங்ஸ்களில் 4501 ரன்கள் சேர்த்துள்ளார்.
இதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒரு இன்னிங்ஸுக்கு சராசரியாக 37 ரன்கள் சேர்த்து உள்ளனர். சுப்மன் கில் ஒரு இன்னிங்ஸுக்கு சராசரியாக 39 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அதன் மூலம், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட ஒரு படி முன்னே இருக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் டக் அவுட் ஆகி இருந்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து மிரட்டினார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே இரண்டு இன்னிங்ஸ்களிலும் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. அவர்கள் இருவரும் ஏமாற்றம் அளித்த நிலையில், சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து தன் மீதான நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்து கே எல் ராகுல் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மனாக உருவெடுப்பார் என முன்பு கூறப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் மீதும் நம்பிக்கை இருந்தது. ஆனால், அவர்கள் தற்போது பின்தங்கி உள்ளனர். ஏற்கனவே, அவர்கள் இருவருக்கும் டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது இடத்தை இழந்து விட்டார். கே எல் ராகுலின் இடம் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் சுப்மன் கில் தனது இடத்தை உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், அவர் இந்திய அணியின் வருங்கால கேப்டன் ஆகவும் அறியப்படுகிறார். டி20 அணி மற்றும் ஒருநாள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் சுப்மன் கில். விரைவில் டெஸ்ட் அணியிலும் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.