சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தனது ஐந்தாவது டெஸ்ட் போட்டி சதத்தை அடித்தார். அவர் 176 பந்துகளில் 119 ரன்கள் அடித்தார். அதன் மூலம் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார். சுப்மன் கில் அடித்துள்ள இந்த சதம் சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த இரண்டாவது சதம் ஆகும்.
இதற்கு முன்பு ராகுல் டிராவிட் மட்டுமே மூன்றாம் வரிசையில் களம் இறங்கி சதம் அடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் ஆக இருந்தார். அவர் சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் அடித்து இருக்கிறார். அந்த அளவிற்கு சேப்பாக்கம் மைதானத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சதம் அடிப்பது என்பது கடினமான ஒன்றாகும்.

உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராகுல் டிராவிட் மட்டுமே மூன்றாம் வரிசையில் சேப்பாக்கம் மைதானத்தில் சதம் அடித்து இருந்த நிலையில், சுப்மன் கில் அந்த சாதனையை சமன் செய்து இருக்கிறார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் 10 ஃபோர் மற்றும் 4 சிக்ஸ் அடித்து 176 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்தார்.
அவருடன் கூட்டணி அமைத்து ஆடிய ரிஷப் பண்ட்டும் சதம் அடித்தார். அவர் 109 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேச அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது.
சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் அடித்த சதம் காரணமாக இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்து இருந்தது. இந்திய அணி 514 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தார். வங்கதேச அணிக்கு 515 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவை. இந்த நிலையில் நான்காம் நாளான நாளை இந்த போட்டி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.