கொழும்பு : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன.
வங்கதேச அணிக்கு எதிரான தன் கடைசி சூப்பர் 4 ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஐந்து வீரர்களுக்கு ஓய்வு அளித்து இருக்கிறது. அதில் சுவாரசியமாக விராட் கோலி இடத்தில் சூர்யகுமார் யாதவ்வை களமிறக்க ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் ரன் குவிப்பதில்லை என்ற குறை உள்ளது. அதை மாற்ற அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக இது மாறி உள்ளது.
மேலும், உலகக்கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் இடம் பெற்று இருக்கும் சூர்யகுமார் யாதவ்வுக்கு சர்வதேச போட்டிகளில் ஆடிய பயிற்சியும் அவசியம். சமீப காலமாக அவர் சவாலான அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
ஒருவேளை உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ்வை களமிறக்க ரோஹித் திட்டம் வைத்திருக்கலாம். அதன் காரணமாகவே முக்கியமான இடமான மூன்றாம் இடத்தில் அவரை களமிறக்க உள்ளார்.
இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது. எனவே, வங்கதேச அணிக்கு எதிரான இந்தப் போட்டியை இந்திய அணி பயிற்சி ஆட்டமாக மாற்றி பயன்படுத்த திட்டமிட்டு ஐந்து மாற்றங்களை செய்து இருக்கிறார் ரோஹித் சர்மா.
அதன்படி இந்தப் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ் என ஐந்து வீரர்களுக்கு ஓய்வு அளித்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.
அவர்களுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா அணியில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். திலக் வர்மாவுக்கு இது முதல் ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து இருந்தார். ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் ஒரு அரைசதம் அடித்து இருக்கிறார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். குல்தீப், பும்ரா, சிராஜ் கடந்த மூன்று போட்டிகளில் தங்களின் திறன்களை முழுமையாக வெளிப்படுத்தி இருந்தனர். இதை அடுத்து அவர்களுக்கு ஓய்வு அளித்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா