ஆண்டிகுவா: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தில் எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி அபாரமாக விளையாடி வந்த நிலையில் தன்சின் ஹஸன் ஓவரில் ஆட்டம் இழந்தார்.
சூப்பர் 8 சூப்பர் ஆட்டத்தின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விடும்.

இந்த சூழலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. ரோகித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.இந்த நிலையில் விராட் கோலி வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இன்னும் சொல்லப்போனால் விராட் கோலி மூன்று சிக்சர்கள் விளாசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி விட்டார் என ரசிகர்கள் கொண்டாடினர். அப்போதுதான் ஆட்டத்தின் 8.1 வது ஓவரில் 21 வயதான வங்கதேச வீரர் தன்சீம் ஹசன் வீசிய பந்தை விராட் கோலி அடிக்காமல் தவற விட, அது போல்டானது.
இதை அடுத்து தன்சீம் ஓவராக குதித்து கொண்டாடினார். விராட் கோலியை அநாகரிகமாக பேசும் வகையில் சைகையை காட்டினார். ஆனால் விராட் கோலி இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார். தன்சீம்மின் இந்த செய்கைக்கு இந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
விராட் கோலி முன் தன்சீம் சின்னப்பையன் என்றும் இந்த செயலுக்கு வட்டியும் முதலுமாக விராட் கோலி திருப்பி தருவார் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். எனினும் சில ரசிகர்கள் ஆர்சிபிக்காக விராட் கோலி விளையாடும்போது இவ்வாறு தான் கத்துவார் என்றும் தற்போது விராட் கோலிக்கு அவருடைய மருந்தையே திருப்பி தன்சீம் கொடுத்து விட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.
21 வயதான தன்சிம் ஹசன் இரண்டு ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். தன்சீம் திறமையான வீரராக தான் தெரிந்தாலும், இது போன்ற செயல்களால் அவரால் ஜொலிக்க முடியாது என்றும் ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தன்சீம் இவ்வாறு சிறப்பாக பந்து வீசினால் ஐபிஎல் தொடரில் விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.