சென்னை: வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நிலையில் அந்த அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மகாசபா என்ற அமைப்பு போராட்டங்களை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. சமூக வலைதளங்களிலும் வங்கதேச டெஸ்ட் தொடரை ரத்து செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. சமூக வலைதளங்களில் "கேன்சல் பங்களாதேஷ் சீரிஸ்" (Cancel Bangladesh Series) என்ற வாசகம் வேகமாக பரவி வருகிறது.
வங்கதேச அணி இந்திய அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அந்த அணி விளையாட உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள வங்கதேச வீரர்கள் நேற்று சென்னை வந்து இறங்கினர்.

சென்னையில் அவர்களுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் கான்பூரில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போதும் மற்றும் குவாலியரில் நடைபெற உள்ள முதல் டி20 போட்டியின் போதும் வங்கதேச வீரர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்து மகாசபா என்ற அமைப்பு இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது.
இது குறித்து இந்து மகாசபாவின் துணைத் தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் பேசுகையில், "வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். கோவில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்து மகாசபா இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள குவாலியரில் எதிர்ப்பு தெரிவிக்கும்." என கூறி இருக்கிறார்.
இதை அடுத்து கான்பூர் மற்றும் குவாலியரில் நடக்க உள்ள போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்படுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சில நாட்கள் முன்பு இதற்கு பதில் அளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், எந்த சூழ்நிலையிலும் போட்டிகள் இடம் மாற்றப்படாது என கூர் இருந்தார். எனினும், கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
வங்கதேச அணி தங்களுக்கான பாதுகாப்பு குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் பேசி உள்ளனர். அவர் வங்கதேச அணிக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்து இருக்கிறார். இந்த எதிர்ப்பு விவகாரம் இந்திய அணி வீரர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. போராட்டக்காரர்கள் மைதானத்திற்குள் வந்துவிட்டால் அது இரு அணி வீரர்களின் பாதுகாப்பையும் கேள்வி குறியாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.