சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் டெஸ்ட் சரித்திரத்தில் மாபெரும் சாதனை ஒன்றை செய்யும். சுமார் 92 ஆண்டு கால இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகள் பெற்று வரலாறு படைக்கும்.
1932இல் இந்தியா தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன் பின் சுமார் 92 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் இந்திய அணி இதுவரை 579 போட்டிகளில் ஆடி உள்ளது. அதில் 178 வெற்றிகள், 178 தோல்விகள் மற்றும் 222 டிராக்கள் செய்து உள்ளது. ஒரு போட்டி டை ஆகி உள்ளது. இந்தியாவின் வெற்றி சதவீதம் மற்றும் தோல்வி சதவீதம் தற்போது சரிசமமாக உள்ளது.

மேலும், இத்தனை ஆண்டுகளில் இந்தியா இதுவரை ஒரு முறை கூட தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்றது இல்லை. முதன்முறையாக தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றால் அது இந்தியாவின் 179 ஆவது டெஸ்ட் போட்டி வெற்றியாக அமையும்.
அதன் மூலம் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை விட அதிக வெற்றிகள் பெற்ற அணியாக மாறும். இதில் சென்னை முக்கிய பங்கு வகிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி வெற்றி இதே சென்னையில் தான் கிடைத்தது. 1952ல் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து இருந்தது இந்தியா.
தற்போது 72 ஆண்டுகளுக்கு பின் அதே சென்னையில் இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகள் பெற்ற அணியாக மாறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு முன் இந்தியா 1988 வரை ஒரே ஆண்டில் தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றிகளை பெற்று முன்னேற்றத்தை காணத் துவங்கியது.
கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பான செயல்பாட்டை அளித்து வருகிறது. இந்தியா தனது முதல் 432 போட்டிகளில் 100 வெற்றிகளை பெற்றிருந்தது. அதாவது இந்திய அணியின் டெஸ்ட் வெற்றி சதவீதம் 23.14 மட்டுமே. 2009 வரை இந்திய டெஸ்ட் அணி இப்படித்தான் இருந்தது.
அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா தான் ஆடிய 147 போட்டிகளில் 78 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த 15 ஆண்டுகளில் மட்டும் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 53 ஆகும். இந்த 92 ஆண்டுகளில் இந்திய அணிக்கு 36 பேர் கேப்டன்களாக செயல்பட்டு உள்ளனர். இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டன் சி கே நாயுடு ஆவார். தற்போது ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் இதுவரை 314 வீரர்கள் விளையாடி உள்ளனர். அமர்சிங் தான் இந்திய அணியின் முதல் கிரிக்கெட் வீரர் ஆவார். 1932, ஜூன் 25 அன்று இந்திய அணியின் முதல் தொப்பியை அவர் பெற்றார். இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான 314 வது வீரர் தேவ்தத் படிக்கல் ஆவார். அவர் 2024, மார்ச் 7 அன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.