சென்னை: வங்கதேச அணிக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து இருக்கிறார். இது அவரது ஆறாவது டெஸ்ட் போட்டி சதம் ஆகும். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அஸ்வின் சதம் அடித்ததன் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காரணமும் உள்ளது. சேப்பாக்கத்தில் இதுவே அஸ்வினின் கடைசி டெஸ்ட் போட்டி என கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. ஜெய்ஸ்வால் ரன்கள் அடித்தது மட்டுமே ஆறுதலாக இருந்தது.

ரோஹித் சர்மா 6 ரன்கள் எடுத்தும், சுப்மன் கில் ரன்னே எடுக்காமலும், விராட் கோலி 6 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். கே எல் ராகுல் 16 ரன்களில் வெளியேறினார். அதற்கு அடுத்து ரிஷப் பண்ட் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. இந்திய அணி 250 ரன்களை தொடுவதே கடினம் என்ற எண்ணம் நிலவியது.
அப்போது அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஜடேஜா 86 ரன்களும், அஸ்வின் 102 ரன்களும் சேர்த்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளிலும் இவர்கள் இருவரும் ரன் சேர்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் அஸ்வின் சென்னை சேப்பாக்கத்தில் தனது ஆறாவது டெஸ்ட் சதம் அடித்ததன் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காரணம் கூறப்படுகிறது.
தற்போது 38 வயதாகும் அஸ்வின் இந்த 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவே அஸ்வின் ஆடும் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் இருக்கலாம். தனது சொந்த மண்ணில் ஆடும் கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இருந்ததால்தான் அபாரமாக ஆடி சதம் அடித்து இருக்கிறார் என சில ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதியில் அஸ்வின் ஓய்வை அறிவிப்பாரா? அல்லது மேலும் சில ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா? என்பது தெரிய வரும். அவர் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்றாலும் கூட இந்திய அணி அடுத்த தலைமுறையை நோக்கி பயணம் செய்யத் தொடங்கி இருப்பதால் அவருக்கு அழுத்தம் அதிகரித்து உள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் சேர்த்திருந்தது. அஸ்வின் 112 பந்துகளுக்கு 102 ரன்கள் சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 91 ஆக இருந்தது. அதேபோல ரவீந்திர ஜடேஜா 117 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 73 ஆக இருந்தது.
முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் ஆல் ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி விரைவாக ரன் சேர்த்தது பாராட்டுக்களை குவித்து வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இவர்கள் இருவரும் மேலும் சேர்க்க வாய்ப்பு உள்ளது. ஜடேஜா சதம் அடிக்கவும், அஸ்வின் 150 ரன்களை தாண்டியும் ரன் குவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.