துபாய்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், வங்கதேச வீரர் தவ்ஹீத் ஹிருதோய் சதம் அடித்து அசத்தியுள்ளார். இது அவரது முதல் ஒருநாள் போட்டி சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆட்டத்தால் படுமோசமான ஸ்கோரை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வங்கதேச அணி 228 ரன்கள் சேர்த்தது.
வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தபோது, ஆரம்பத்தில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறியது. அப்போது ஐந்தாம் வரிசையில் களம் இறங்கிய தவ்ஹீத் ஹிருதோய் நிதானமாக ஆடி சதம் அடித்தார். அவர் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அவருடன் கூட்டணி சேர்ந்த ஜாகெர் அலி 68 ரன்கள் சேர்த்தார். இந்த இருவரின் ஆட்டத்தால் வங்கதேச அணி 200 ரன்களைத் தாண்டியது. இறுதியில் வங்கதேசம் அனைத்து விக்கெட்களையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது. தவ்ஹீத் ஹிருதோய் கடைசி ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறியபோது, ஒட்டுமொத்த வங்கதேச அணியினரும், அந்த அணியின் ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி உற்சாகம் அளித்தனர். இந்த காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சதம் அடிக்கும் இரண்டாவது வங்கதேச வீரர் என்ற பெருமையை தவ்ஹீத் ஹிருதோய் பெற்றார். இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு வங்கதேச வீரர் தமிம் இக்பால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 128 ரன்கள் எடுத்திருந்தார்.
தவ்ஹீத் ஹிருதோய் 23 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு கேட்ச்சை கொடுத்தார். அதை ஹர்திக் பாண்டியா தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தவ்ஹீத் ஹிருதோய் அபாரமாக ஆடி சதம் அடித்துள்ளார். வங்கதேச அணி 100 அல்லது 150 ரன்களைத் தாண்டுமா என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி 200 ரன்களைத் தாண்டுவது சாத்தியமே இல்லை என அனைவரும் நினைத்தனர். ஆனால் தவ்ஹீத் ஹிருதோய் அதை தலைகீழாக மாற்றினார்.