குவாலியர்: இந்திய அணியில் சுமார் 1066 நாட்களுக்கு பின்பு மீண்டும் இடம்பெற்ற தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி தனக்கு மூன்று ஆண்டுகளாக வாய்ப்பு தராமல் இருந்த தேர்வுக் குழுவை சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஆறு போட்டிகளில் ஆடியிருந்தார் வருண் சக்கரவர்த்தி.
அதன் பின்பு அவருக்கு ஏற்பட்ட சிறிய காயத்தை சுட்டிக்காட்டி சுமார் மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. 1066 நாட்களுக்குப் பின் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை பட்டியல் ஒன்றில் கூட இடம் பிடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

வருண் சக்கரவர்த்தி 2021 முதல் 2024 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்திய அண்ணி ஆடிய 86 டி20 போட்டிகளில் அணியில் இடம் பெறவில்லை. இதற்கு முன் கலீல் அகமது 2019 முதல் 2024 வரையில் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தார். அவர் சுமார் 104 போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்து பின் மீண்டும் இடம் பெற்று இருந்தார்.
அவருக்கு அடுத்ததாக வருண் சக்கரவர்த்தி 86 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடாமல் இருந்துள்ளார். வருண் சக்கரவர்த்தி நீண்ட இடைவேளைக்கு பின் இடம் பெற்ற போதும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தனது சிறந்த சர்வதேச டி20 பந்துவீச்சை பதிவு செய்தார்.
4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் ஓவரில் 15 ரன்கள் விட்டுக் கொடுத்த அவர், அடுத்த மூன்று ஓவர்களில் வெறும் 16 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான்.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார் கம்பீர். அப்போது அந்த அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்று இருந்தார். அவர் 2024 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
அப்படி இருந்த போதும் அவருக்கு டி20 உலகக் கோப்பை அணி, அதன் பின்பு நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடர்கள் என எதிலும் இடம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவரது முயற்சியில் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய அணியில் இடம் பெற்று கொடுத்து இருக்கிறார். வருண் சக்கரவர்த்தி இந்தப் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி தனது தேர்வை நியாயப்படுத்தி இருக்கிறார்.
வருணுக்கு தற்போது 33 வயது ஆகும் நிலையில் இன்னும் சில ஆண்டுகளே அவர் இந்திய அணியில் இடம் பெற முடியும். 2026 டி20 உலகக்கோப்பையில் அவரை ஆட வைக்க கவுதம் கம்பீர் திட்டமிட்டு இருக்கக் கூடும். அதே சமயம், இளம் சுழற் பந்துவீச்சாளர்களை தாண்டியே வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும்.