டெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக இந்திய டி20 அணியில் ஸ்பின்னருக்கான இடத்தை வருண் சக்கரவர்த்தி பிடித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆதரவு இருப்பதோடு, அவரின் பவுலிங் ஃபார்மும் சரியான நேரத்தில் உச்சத்திற்கு வந்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்திய நிலையில், 2வது போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணியின் ஆதிக்கம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து வருகிறது.

இந்த டி20 தொடர் மூலமாக இந்திய அணியின் ஸ்பின்னர்களுக்கான இடத்தை தமிழக வீரர்கள் பிடித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதன்மை ஸ்பின்னர்களாக இருந்த ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் இருந்தனர். இதில் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இதில் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் முதன்மை ஸ்பின்னர்களாக இருந்தாலும், வருண் சக்கரவர்த்தி அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இல்லை. ஏனென்றால் சுனில் நரைனை போலவே மிஸ்ட்ரி தன்மை கொண்ட பவுலராக வருண் சக்கரவர்த்தி இருக்கிறார். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சுனில் நரைனை போன்ற ஸ்பின்னராக இந்திய அணியில் உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வந்துள்ளார்.
இதனை மனதில் வைத்தே வங்கதேச டி20 தொடரில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் போட்டியிலேயே வாய்ப்பு கிடைத்தது. 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்த வருண் சக்கரவர்த்தி முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தற்போது 2வது டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசிய வருண் சக்கரவர்த்தி 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 14 டாட் பால்கள் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 2 போட்டிகளிலும் சேர்த்து 50 ரன்களை விட்டுக் கொடுத்த 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பவர் பிளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என்று அனைத்து சூழல்களிலும் பவுலிங் செய்யக் கூடியவராக இருப்பதால், வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.