சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விராட் கோலி வெறித்தனமான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் அடித்த ஒரு சிக்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ஒரு தற்காலிக சுவரை உடைத்து ஓட்டை போட்டு இருக்கிறது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக விராட் கோலி அதிக சிக்ஸ் அடிக்க மாட்டார். ஆனால், வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் கோலி உள்ளூர் வேகப்பந்துவீச்சாளர் ஒருவரின் பந்து வீச்சில் இமாலய சிக்ஸ் ஒன்றை அடித்தார். அந்த பந்து மைதானத்தின் உட்புறத்தில் இருந்த தற்காலிக சுவரின் மீது மோதி அதை சேதப்படுத்தியது.

இதை அடுத்து விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து விமர்சித்து வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கடந்த 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் அதன் பின் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விராட் கோலி சரியாக ரன் குவிக்காமல் சொதப்பி இருந்தார்.
மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டிகளிலும் அதிக அளவில் ரன் குவிக்கவில்லை. 2020க்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது டெஸ்ட் பேட்டிங் ஃபார்ம் சராசரியாகவே உள்ளது. தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் சிறந்த நான்கு டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் என விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை குறிப்பிடுகின்றனர்.
2020க்கு முன்பு வரை இந்த நால்வரில் விராட் கோலி அதிக சதங்கள் அடித்து முன்னிலையில் இருந்தார். மேலும், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை விட அதிக பேட்டிங் சராசரி வைத்து இருந்தார். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. விராட் கோலியை விட மற்ற மூவரும் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளனர். அதிக பேட்டிங் சராசரியும் வைத்து உள்ளனர்.
இந்த நிலையில் விராட் போலி அந்த நால்வரிலேயே கடைசி இடத்தில் தான் இருக்கிறார் என முன்னாள் வீரர்கள் பலரும் சுட்டிக்காட்டி இருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் இந்திய அணி அடுத்து ஆட உள்ள மூன்று டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு ரன் குவிக்க வேண்டும்.
முதலில் வனதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி, அதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த பத்து டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அதிக அளவில் அரை சதம் மற்றும் சதங்கள் அடித்தால் நிச்சயம் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடிப்பார். அதற்கான முயற்சியாகவே அவர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற வலைப் பயிற்சியின் போது அதிரடியாக சிக்ஸ் அடித்து இருக்கிறார்.