
பகல் - இரவு டெஸ்ட்
இந்தியாவில் நடைபெற்ற முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

வங்கதேசத்தின் நிலை
இந்தப் போட்டியில், வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸில் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் போட்டியில் ஆடத் துவங்கிய வங்கதேசம் விக்கெட்களை இழந்து திணறி வந்தது.

போராட்டம்
4 விக்கெட்களை இழந்த நிலையில், மெஹிதி ஹாசன், முஷ்பிகுர் ரஹீம் பேட்டிங் செய்து வந்தனர். ரஹீம் 40 ரன்களையும், மெஹிதி 10 ரன்களையும் எடுத்து ஆடி வந்தனர்.

ஷமி வீசிய 24வது ஓவர்
அப்போது 24வது ஓவரை முகமது ஷமி வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்டார் மெஹிதி ஹாசன். பந்து லேசாக பவுன்ஸ் ஆகி வந்த நிலையில், மெஹிதி கண்ணை மூடிக் கொண்டு அடிக்க முயன்றார்.

எகிறிய பந்து
பந்து லீடிங் எட்ஜ் ஆகி அவருக்கு பின்னே பறந்தது. உயரச் சென்ற பந்து கேட்ச் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய வீரர்கள் பரபரப்படைந்தனர். ஆனால், பந்து பவுண்டரி எல்லையையும் தாண்டி சிக்ஸர் ஆனது.

கோலி வியப்பு
சரியாக அடிக்கப்படாமல் எட்ஜ் ஆன பந்து எப்படி சிக்ஸர் ஆனது என வியப்பில் ஆழ்ந்த கேப்டன் கோலி தலையில் கை வைத்தார். பந்தை வீசிய ஷமி சிக்ஸ் போனதை பார்த்து அதிர்ச்சியில் நின்றார்.

கைவிரித்த புஜாரா
தேர்ட் மேன் திசையில் பந்தை கேட்ச் பிடிக்க சென்ற புஜாரா பந்து சிக்ஸ் போனதை கண்டு ஆச்சரியத்தில் கையை விரித்து, "நான் என்ன செய்வது?" என சக வீரர்களுக்கு சைகை காட்டினார்.

இந்தியா வெற்றி
பின்னர் வங்கதேசம் 195 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டாம் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது. இந்திய அணியிடம் இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைந்த வங்கதேசம், டெஸ்ட் தொடரை 0 - 2 என இழந்தது.


Click it and Unblock the Notifications