இன்னும் 58 ரன் அடித்தால் போதும்.. பிரம்மாண்ட மைல் கல் சாதனை படைக்கப் போகும் விராட் கோலி
சென்னை: விராட் கோலி இன்னும் 58 ரன்கள் அடித்தால் கிரிக்கெட் உலகில் பிரம்மாண்ட மைல் கல் சாதனை ஒன்றை செய்வார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த வகையில் விராட் கோலி அந்த சாதனையை சென்னையில் செய்யவும் அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது விராட் கோலி டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில்
26,942 ரன்கள் சேர்த்துள்ளார். இன்னும் 58 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் அவர் 27,000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டுவார். இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே அந்த மைல் கல்லை எட்டி உள்ளனர். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை எட்டிய நான்காவது வீரர் என்ற சரித்திரத்தை விராட் கோலி படைப்பார்.

விராட் கோலி மொத்தம் 533 சர்வதேச போட்டிகளில் விளையாடி 591 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். அதில் மொத்தமாக 26,942 ரன்கள் சேர்த்துள்ளார். 80 சதம் மற்றும் 140 அரை சதங்களை அடித்துள்ளார். அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சச்சின் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி 80 சதங்கள் அடித்துள்ளார்.
ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 34,357 ரன்கள் சேர்த்துள்ளார். குமார் சங்ககாரா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 28,016 ரன்கள் சேர்த்துள்ளார். ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் 27,483 ரன்கள் சேர்த்துள்ளார்.
விராட் கோலி நான்காவது இடத்தில் இருக்கிறார். அவர் 26,942 ரன்கள் சேர்த்துள்ளார். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்து அதிக ரன்கள் குவித்து இருக்கும் வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. ரோஹித் சர்மா 19,234 ரன்கள் சேர்த்துள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 15-வது இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications