நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்திய அணி வங்கதேச அணியுடன் பயிற்சி போட்டியில் மோதவுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள நியூயார்க் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு டி20 உலகக் கோப்பை சவாலில் பங்கேற்க அமெரிக்கா சென்ற இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிளேயிங் லெவன் யார்?
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி யாரை பிளேயிங் லெவனில் பயன்படுத்தலாம் என்பதை அறிய இந்த பயிற்சிப் போட்டியை பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சர்வதேச டி20 போட்டிகளில் அனுபவம் குறைந்த வீரர்களுக்கு, இந்தப் போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என இந்திய அணி வட்டாரம் தெரிவித்து இருக்கிறது.
இந்தப் போட்டி நடைபெறும் மைதானம் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் நிலையில் இங்கு நடக்கும் முதல் போட்டி இதுதான். இந்த மைதானத்தின் பிட்ச்-உம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 200 ரன்கள் அடிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
வங்கதேச அணி, கத்துக்குட்டியான அமெரிக்க அணியிடமே டி20 தொடரை இழந்து இருப்பதால் இந்தப் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி உள்ளது. எனவே, இந்திய அணி இந்த பயிற்சிப் போட்டியில் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அதிலும் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தால் இந்தியாவே வெற்றி பெறும்.
விராட் கோலி நேற்று தான் அமெரிக்கா சென்று அடைந்து இருக்கிறார். எனவே, அவருக்கு ஓய்வு அளிக்கப்படும். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விளையாட வாய்ப்புள்ளது. இது ஒரு பயிற்சி போட்டி என்பதால், 11க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்திய அணி சார்பாக விளையாட வாய்ப்புள்ளது. குறிப்பாக, அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் பந்து வீச வாய்ப்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை அமெரிக்காவில் இந்திய அணி விளையாடியது இல்லை. மேலும், இதே மைதானத்தில் தான் இனி வரும் குரூப் சுற்று போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதால், அனைத்து வீரர்களும் இந்த பிட்ச்சை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, விராட் கோலியை தவிர மற்ற 14 வீரர்களும் இந்த பயிற்சி போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
இந்தியா - வங்கதேசம் பயிற்சி போட்டி நடைபெறும் தேதி - ஜூன் 1, 2024. நேரம் - இரவு 8 மணி
.
இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. வங்கதேச அணி குரூப் பி-யில் இடம்பெற்றுள்ளது.