IND vs BAN: எல்லை மீறிய ரோஹித் ரசிகர்.. ஓடி வந்து பாய்ந்த அமெரிக்க போலீஸ்.. கதிகலங்க வைத்த சம்பவம்
நியூயார்க் : இந்தியா - வங்கதேசம் ஆடிய 2024 டி20 உலக கோப்பை பயிற்சி போட்டியின் இடையே ரசிகர் ஒருவர் ஓடி வந்து ரோஹித் சர்மாவை கட்டி அணைத்தார். அப்போது அமெரிக்க காவல் துறையை சேர்ந்தவர்கள் ஓடி வந்து, பாய்ந்து அவரை மடக்கினர். அந்தக் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
இந்தியா - பாகிஸ்தான் ஆடும் உலகக் கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இது போன்ற சம்பவம் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. அதே சமயம் சாதாரண ரசிகர்கள் இதுபோல அத்துமீறுவதால் அமெரிக்காவில் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

பொதுவாக இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் இடையே இது போல ரசிகர்கள் அத்துமீறி மைதானத்திற்கு உள்ளே நுழைவார்கள். அவர்களை பாதுகாவலர்கள் மற்றும் காவல் துறையினர் மடக்கிப் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வார்கள். ஆனால், இந்தியாவில் அதிக தண்டனை கிடைக்காது. பல சமயம் வழக்குகள் கூட பதிய மாட்டார்கள்.
ஆனால், அமெரிக்காவில் சட்டங்கள் கடுமையாக உள்ளன. இந்த நிலையில், ரோஹித் சர்மா ரசிகர் அத்துமீறி நுழைந்தார். அவர் உள்ளே வந்ததை பார்த்ததும் ஐந்து அமெரிக்க காவலர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்தனர். அதில் இருவர் அந்த ரசிகர் மீது பாய்ந்தனர். அவரை தரையில் சாய்த்து, அவர் மீது அமர்ந்தனர், அவரது இரண்டு கைகளையும் பின்புறமாக மடக்கினர். பின்பு அவரை தரையோடு இருக்குமாறு எச்சரித்தனர். அவர் லேசாக அசைந்ததால் அவர் மீது முழு எடையையும் கொடுத்து அழுத்தம் கொடுத்தனர். இந்த காட்சிகள் அனைவருக்கும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
அருகில் நின்று கொண்டிருந்த ரோஹித் சர்மா அந்த ரசிகரை விட்டு விடுமாறு காவலர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு அமெரிக்க காவல் துறையினர் கடுமையாக நடந்து கொண்டனர். இத்துடன் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் இது போன்று அத்து மீறுபவர்கள் மீது வழக்குப் பதியப்படும். உடனடியாக அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தலும் இருக்கும் நிலையில், இனி வரும் போட்டிகளில் அமெரிக்க காவல்துறையினர் இப்போது நடந்து கொண்டதை விட இன்னும் கடுமையாக நடந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications