நியூயார்க்: வங்கதேசம் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சிவம் துபே டெஸ்ட் மேட்ச் போல பேட்டிங் செய்து சொதப்பினார்.
2024 டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரராக இறங்கிய சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து மோசமான துவக்கத்தை அளித்தார்.

கேப்டன் ரோஹித் சர்மா 19 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அபார ஆட்டம் ஆடினார். அடுத்து சிவம் துபேவுக்கு வழிவிட்டு ரிஷப் பண்ட் சென்றார். சூர்யகுமார் யாதவ் களத்தில் அதிரடியாக ஆடிவந்த நிலையில், சிவம் துபேவும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக ஸ்பின் பவுலர்களை சிக்ஸருக்கு விரட்டுவார் என பில்டப் கொடுக்கப்பட்டு வரும் சிவம் துபே இந்தப் போட்டியில் ஸ்பின் பந்துவீச்சாளர்களை சந்திக்க திணறினார். 16 பந்துகளை சந்தித்த அவர் ஒரே ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்தார். ஒரு ஃபோர் கூட அடிக்கவில்லை. 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் சிவம் துபே. அவரது ஸ்ட்ரைக் ரேட் 87.5 ஆக இருந்தது.
இதை அடுத்து. "டெஸ்ட் மேட்ச்சா ஆடுகிறீர்கள்?" என சிவம் துபே குறித்து ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இந்திய அணி இந்த போட்டியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 23 பந்துகளின் 40 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.