இந்தியா - வங்கதேசம் கடைசியாக சந்தித்த போது என்ன நடந்தது? இந்திய மண்ணில் கிடைத்த மாபெரும் வெற்றிகள்
கொல்கத்தா: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. முதல் போட்டி செப்டம்பர் 19 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வங்கதேச அணியின் கடைசி இந்திய சுற்றுப்பயணத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து பார்க்கலாம்.
வங்கதேச அணி முதன்முதலாக 2000 ஆவது ஆண்டில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது. வங்கதேசத்தின் முதல் எதிரணியே இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது.

அப்போது வரலாற்று சிறப்புமிக்க போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி அப்போதுதான் நடந்தது. 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணி இந்திய சுற்றுப்பயணத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது. அதில் முதல் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது வங்கதேச அணியின் கேப்டனாக மொமினுல் ஹக் பதவியேற்று இருந்தார்.
அவர் பதவியேற்ற பின் சந்தித்த முதல் டெஸ்ட் தொடர் அதுதான். அந்தப் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அப்போது வங்கதேச அணி முதல் இன்னிங்க்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. அப்போது மயங்க் அகர்வால் 330 பந்துகளில் 243 ரன்கள் சேர்த்தார். புஜாரா, அஜின்க்யா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்து இருந்தனர்.
இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணி 343 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய வங்கதேச அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மூன்றாவது நாளே அந்தப் போட்டி முடிவுக்கு வந்தது. இந்தியா ஒரு இன்னிங்ஸ் மட்டும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்று இருந்தது.
ஷமி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது.
அந்த போட்டியிலும் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்களும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்களும், ஷமி இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். வங்கதேசம் 30.3 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
அடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. விராட் கோலி 194 பந்துகளில் 136 ரன்கள் எடுத்திருந்தார். அது அவரது 70 வது சதமாக இருந்தது. அதன் மூலம் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையையும் அவர் சமன் செய்திருந்தார். அதுவே விராட் கோலி கேப்டனாக அடித்த கடைசி சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஆடிய வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உமேஷ் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த மோசமான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பின் ஐந்து ஆண்டுகள் கழித்து வங்கதேசம் மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்த முறை பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய நிலையில் இந்தியாவுடன் ஆட உள்ளது. இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications