ஐதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டி20 தொடரில் வாய்ப்பு பெறாத 3 வீரர்களுக்கு கடைசி போட்டியில் வாய்ப்பளிக்க கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் கவுதம் கம்பீர் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி நாளை ஐதராபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்ய வேண்டும் என்பது வீரர்கள் தீவிரமாக உள்ளனர். முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றும் அசத்தலாக அமைந்தது.

3வது டி20 போட்டியிலும் அதனை தொடர பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தீவிரமாக இருக்கிறார். அதேபோல் இந்த டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரவி பிஷ்னாய், ஹர்சித் ராணா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஐதராபாத் மைதானத்தை பொறுத்தவரை பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் முதல் 2 போட்டிகளில் மோசமாக ஆடிய சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவருக்கும் இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் வேறு தொடக்க வீரர்கள் இல்லாததும் சஞ்சு சாம்சனுக்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் நிச்சயம் இந்திய அணியில் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரியான் பராக்கிற்கு பதிலாக திலக் வர்மா களமிறங்கவும், வாஷிங்டன் சுந்தரின் இடத்தில் ரவி பிஷ்னாய் களமிறங்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள வருண் சக்கரவர்த்தி இந்த போட்டியிலும் விளையாட வைக்கப்படுவார். அதேபோல் சீனியர் வீரரான அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் யாதவ் இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்கபப்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் மயங்க் யாதவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஹர்சித் ராணா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.