சென்னை: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. 2012ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய 17 டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை தொடரவே இந்திய அணி விரும்பும் என்பதால், வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமிக்கதாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை சுமார் 6 மாதங்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனுபவ வீரர்கள் அனைவருக்கும் போதுமான ஓய்வு கொடுத்து வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நேரடியாக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் காத்திருக்கிறது. சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், நிச்சயம் இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும்.

அந்த வகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். தொடர்ந்து நம்பர் 3ல் சுப்மன் கில், நம்பர் 4ல் விராட் கோலி களமிறங்குவார். இதனைத் தொடர்ந்து நம்பர் 5க்கான போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் இருக்கின்றனர். இதில் அனுபவ வீரரான கேஎல் ராகுல் இறங்குவார் என்று கம்பீர் கூறியுள்ளார்.
அதேபோல் 21 மாதங்களுக்கு பின் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ள நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் நம்பர் 6ல் களமிறங்குவார். இதனால் துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதையும் கம்பீர் ஏற்கனவே கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்திலேயே ஐபிஎல் தொடரை விளையாடி வரும் ஜடேஜா நம்பர் 7லும், சொந்த மண்ணில் அஸ்வின் நம்பர் 8லும் களமிறங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது.
இதன்பின் அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் ஒரே மாதிரியான பவுலர்கள் என்பதால், அக்சர் படேலுக்கு ஓய்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இடதுகை பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இருப்பதால், அக்சர் படேலின் அந்த சாதகமும் பலிக்காது என்று பார்க்கப்படுகிறது.
பின்னர் நம்பர் 10ல் பும்ராவும், நம்பர் 11ல் சிராஜ் அல்லது யாஷ் தயாள் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்காக இடதுகை வேகப்பந்துவீச்சாளரை இந்திய அணி நிர்வாகம் தயார் செய்து வருகிறது. யாஷ் தயாள் இந்திய அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரின் திறனை அறிந்து கொள்ளும் வகையில் களமிறக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால் கம்பீரின் பிளேயிங் லெவனில் ஒரு இடதுகை பவுலர் கட்டாயம் தேவை என்பதில் தீவிரமாக இருப்பார். மேலும் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கப்படும். இதனை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நிறுவனம் நேரலையாக ஒளிபரப்ப உள்ளது. அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை ஜியோ சினிமா ஓடிடி தளம் நேரலையாக ஒளிபரப்பு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.