கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடிவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அதிரடியாக ஆடி 285 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. பலரும் இந்திய அணி 350 முதல் 400 ரன்கள் வரை எடுக்க முயற்சி செய்து இருக்கலாம்.. அப்படி செய்திருந்தால் வங்கதேசம் மேலும் அழுத்தத்தில் இருந்து இருக்கும் என கூறி வருகின்றனர்.
ஆனால், இந்திய அணி பிடிவாதமாக அதிரடி ஆட்டம் மட்டுமே ஆடுவோம் என்ற உறுதியுடன் அதிரடியாக ஆடி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி ஏன் கூடுதலாக ரன் சேர்க்கவில்லை? என்பது குறித்து பார்க்கலாம். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. அப்போது வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்த இரண்டு நாட்களும் மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் கடைசி இரண்டு நாட்களில் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் வங்கதேச அணியின் விக்கெட்களை விரைவாக வீழ்த்த வேண்டும் என்பதோடு, இந்திய அணி பேட்டிங்கில் அதிவேகமாக ரன் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது.
அதேபோல வங்கதேச அணியை 233 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா. அதன் பின்னர் நான்காம் நாளில் 50 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தது. இந்த நிலையில், இந்திய அணி அதிரடியாக ஆட முடிவு செய்தது. வங்கதேச அணியின் ஸ்கோரை தாண்டினாலே போதுமானது. ஆனால், அதை மிக குறைந்த ஓவர்களில் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்த இந்திய அணி, அதை கச்சிதமாக செய்தது.
முதல் மூன்று ஓவர்களிலேயே 51 ரன்கள் எடுத்து டி20 போட்டியின் அதிரடியையும் மிஞ்சி ரன் சேர்த்தது இந்திய அணி. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் வங்கதேச அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். ரோஹித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்களை சேர்த்தார். ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்களை சேர்த்தார். அடுத்து சுப்மன் கில் 36 பந்துகளில் 39 ரன்களும், விராட் கோலி 35 பந்துகளில் 47 ரன்களும், கே எல் ராகுல் 43 பந்துகளில் 68 ரன்களும் சேர்த்தனர்.
அதன் பின் வந்த பின்வரிசை வீரர்கள் சொற்ப ரண்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 34.4 ஓவர்களில் எல்லாம் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியை விட கூடுதலாக 52 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்த நிலையில், ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸ்-ஐ டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இந்திய அணி ஒரு ஓவருக்கு 8.22 என்ற விகிதத்தில் ரன் சேர்த்து இருந்தது.
ஒருவேளை இந்திய அணி 350 ரன் அல்லது 400 ரன் வரை எடுக்க வேண்டும் என நினைத்திருந்தால் சற்று நிதானமாக ஆடி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்படி என்றால் நிச்சயமாக இந்திய அணிக்கு 60 ஓவர்கள் முதல் 65 ஓவர்கள் வரை தேவைப்பட்டிருக்கும். 65 ஓவர்களில் 400 ரன்களை எட்டி 150 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்று இருந்தாலும், அது போட்டியை டிராவுக்கு கொண்டு செல்லவே வாய்ப்பாக இருந்து இருக்கும்.
ஏனெனில், நான்காம் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்திருக்கும். ஐந்தாவது நாளில் வங்கதேச அணியின் அனைத்து விக்கெட்களையும் விரைவாக வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தோடு வங்கதேச அணி கூடுதலாக சேர்த்த ரன்களையும் இந்திய அணி சேசிங் செய்ய வேண்டியது இருக்கும். ஒரு நாள் ஆட்டத்தில் இவை அனைத்தையும் செய்து முடிக்க முடியுமா? என்பது சந்தேகமே.
அதே சமயம் நான்காவது நாளின் கடைசி சில ஓவர்களில் வங்கதேச அணியை இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வைத்தால் அப்போது சில விக்கெட்களை வீழ்த்த முடியும். அது வங்கதேச அணிக்கு ஐந்தாம் நாள் பேட்டிங்கில் கடும் அழுத்தத்தை கொடுக்கும். கேப்டன் ரோஹித் சர்மாவின் இந்த திட்டப்படியே அடுத்து ஆடிய வங்கதேசம் நான்காவது நாளின் கடைசி 11 ஓவர்கள் பேட்டிங் செய்து 26 ரன்கள் எடுத்து 2 விக்கெட்களை இழந்தது.
தற்போது ஐந்தாம் நாள் ஆட்டத்தில் எட்டு விக்கெட்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு வங்கதேசம் இந்த போட்டியை டிரா செய்ய முயற்சி செய்யும். அதை உடைப்பது சற்று எளிது. ஒருவேளை வங்கதேச அணி இந்திய அணிக்கு 100 முதல் 150 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தாலும் அதை 10 ஓவர்கள் முதல் பதினைந்து ஓவர்களுக்குள் இந்திய அணி எட்ட முயற்சி செய்யும். நிச்சயமாக இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி அதிரடியாக ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, முதல் இன்னிங்ஸில் விரைவாக ரன் சேர்த்து டிக்ளர் செய்தது சரியான முடிவாகவே அமைந்துள்ளது.