ஆன்டிகுவா : இந்திய அணி வீரர்கள் எந்தவித அச்சமின்றி விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அட்வைஸ் கொடுத்துள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பின், அங்கு என்ன நடக்குமோ அதுதான் நடக்கும் என்றும், கோப்பையை வெல்வதை பற்றி சிந்தனை இப்போது தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 ஆட்டம் நடக்கவுள்ளது. ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்திலும் வென்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும். அதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் கூட ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த சில ஐசிசி தொடர்களில் இந்திய அணியை பொறுத்தவரை எளிதாக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். ஆனால் கடைசி நேரத்தில் சில அடிப்படை தவறுகள் மற்றும் பதற்றம் காரணமாக கோப்பையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். இந்த நிலையை தவிர்க்கும் வகையில் இந்திய அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கியமான அட்வைஸ் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், இந்திய அணியை பொறுத்தவரை போட்டியில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பற்றி இப்போதே சிந்திக்க தேவையில்லை. மற்றொரு போட்டியாக கருதி விளையாடும் போது எளிதாக வெற்றியை பெற முடியும். இந்திய வீரர்களின் ஆட்டம் தற்போது அப்படிதான் இருக்கிறது. இதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
இந்திய அணியின் முக்கியமான வீரர் ஜஸ்பிரித் பும்ரா தான். அவருக்கு பிட்ச் எப்படி இருக்கிறது என்பதே தேவையில்லை. எந்த பிட்சிலும் சூழலுக்கு ஏற்ப பவுலிங் செய்து விக்கெட்டை வீழ்த்த கூடியவர். அவரிடம் அவ்வளவு வெரைட்டியான பந்துகள் உள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நீண்ட நாட்களுக்கு பின் புதிய பந்தில் பவுலிங் செய்தார்.
சிராஜ் இல்லாத போது, குர்பாஸின் விக்கெட்டை 2வது பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அவரால் எந்த பிட்சிலும், சூழலிலும் வேகமாக மாறிக் கொள்ள முடிகிறது. அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரில் பேட்ஸ்மேன் ஆக்ரோஷமாக விளையாடுவதை கண்ட பின், உடனடியாக வேகத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று புத்திசாலித்தனமாக சிந்திக்கிறார். இந்திய அணி அச்சமின்றி விளையாட வேண்டும். இறுதிப்போட்டியில் என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.