சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. 2வது நாள் ஆட்டத்தில் கூடுதலாக 37 ரன்கள் மட்டுமே சேர்த்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சிறப்பாக ஆடிய அஸ்வின் 113 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்களை குவித்திருந்தது. அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தை அஸ்வின் - ஜடேஜா கூட்டணி தொடங்கியது. டஸ்கின் அஹ்மத் வீசிய முதல் ஓவரில் ஜடேஜா எதிர்கொண்டு நிதானமாக ஆடினார். பின்னர் 2வது ஓவரை ஹசன் மஹ்முத் 2வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரியை அஸ்வின் அடிக்க, ஆட்டம் சுவாரஸ்யமானது. இதனால் இருவரும் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டஸ்கின் அஹ்மத் பவுலிங்கில் ஜடேஜா ஒரு ரன் கூட கூடுதலாக சேர்க்காமல் 124 பந்துகளில் 2 சிக்ஸ், 10 பவுண்டரிகள் உட்பட 86 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் அஸ்வின் - ஜடேஜாவின் 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. இதன்பின் ஆகாஷ் தீப் - அஸ்வின் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை விளாச தொடங்கியது.
அஸ்வின் நிதானமாக பவுலர்களை எதிர்கொள்ள, ஆகாஷ் தீப் தனது ஸ்டலில் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். பின்னர் டஸ்கின் பவுலிங்கில் ஆகாஷ் தீப் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பும்ராவுக்கு அதிக ஸ்ட்ரைக் கொடுக்க முடியாததால், அஸ்வின் பேட்டை சுழற்றினார். மீண்டும் டஸ்கின் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்ற அஸ்வின், 133 பந்துகளில் 2 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 113 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து அடுத்த சில பந்துகளில் பும்ரா 7 ரன்களில் வெளியேற, இந்திய அணி மொத்தமாக 91.2 ஓவர்களில் 376 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெளியேறியது. 2வது நாளில் இந்திய அணி 37 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. வங்கதேசம் அணி தரப்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளையும், டஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.