மும்பை: 2023 ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்களை வரிசையாக விட்டுக் கொடுத்த வேகப் பந்துவீச்சாளர் யாஷ் தயாள் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அணியில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
அப்போது ரிங்கு சிங் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்ததால் தனது குடும்பம் மற்றும் தனது மகன் யாஷ் தயாள் என்ன மனநிலையில் இருந்தனர் என்பது குறித்து அவரது தந்தை சந்தர்பால் பல விஷயங்களை வெளிப்படையாக கூறி இருக்கிறார். பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் எங்கள் வீட்டை தாண்டி செல்லும்போது "ரிங்கு சிங், ரிங்கு சிங்" என கூச்சலிட்டபடி சென்றார்கள் என அதிர வைக்கும் தகவல் ஒன்றையும் அவர் கூறி இருக்கிறார்.

2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் கடைசி ஓவரில் யாஷ் தயாள் பந்துவீச்சில் 5 சிக்ஸ் அடித்தார் ரிங்கு சிங். அதன் மூலம், அந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று இருந்தது. அப்போது ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் விட்டுக் கொடுத்த யாஷ் தயாள் கடுமையான கேலி, கிண்டல்களை சந்தித்தார்.
அந்த கேலி, கிண்டல்கள் அவரது வீடு வரை சென்று குடும்பத்தினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. அது குறித்து அவரது தந்தை மனம் திறந்து பேசினார். மேலும், அந்த நிலையில் இருந்து வெளியே வந்து, எப்படி யாஷ் தயாள் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்து விவரித்து இருக்கிறார். யாஷ் தயாள் தந்தை சந்தர்பால் பேசுகையில் -
"அது எங்களுக்கு ஒரு விபத்தை போல இருந்தது. பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் பேருந்து எங்கள் வீட்டை தாண்டி சென்றது. அப்போது அதிலிருந்த சிறுவர்கள் "ரிங்கு சிங், ரிங்கு சிங், 5 சிக்ஸர்கள்" என கூச்சலிட்டபடி சென்றனர். அது எங்களுக்கு அதிக வலியை கொடுத்தது. எங்கள் மகனுக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்? அதை நினைத்து என் மனைவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். என் மகன் வீட்டுக்குள் முடங்கினார்."
"ஆனால், நீ இந்தியாவுக்கு ஆடும் வரை நாங்கள் உன் மீதான நம்பிக்கையை கைவிட மாட்டோம். நீ நிச்சயமாக இந்தியாவுக்காக ஆடுவாய் என்று அவரிடம் கூறினோம். அவர் ஐந்து சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த அன்றைய இரவே, "எது நடந்ததோ அது நடந்து விட்டது. இது காலத்திற்கும் நீடிக்காது." என்று நான் அவருக்கு விளக்கி சொன்னேன். மேலும், ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்களை அடித்தார். ஆனால், ஸ்டூவர்ட் பிராட் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாறினார். அதை அவருக்கு நான் விளக்கி சொன்னேன்."
"இப்போது யாஷ் தயாள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை விட ஒரு தந்தையாக எனக்கு வேறு எந்த மிகப்பெரிய விஷயமும் இருக்காது. எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் அணியில் இடம் பெற்று நாட்டுக்காக விளையாடுவது என்பது உச்சகட்ட கனவாக இருக்கும். இது எங்களுக்கு, எங்கள் குடும்பத்திற்கு, எங்கள் நண்பர்களுக்கு முக்கியமான நாள். இதற்கான முழு தகுதியும் அவருக்கு உள்ளது. நான் அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு எத்தனை கடினமாக உழைத்து இருந்தாலும், இது எல்லாமே அவரது முயற்சி தான்". இவ்வாறு சந்தர்பால் தனது மகன் யாஷ் தயாள் குறித்து கூறினார்.