IND vs BAN: உலக அளவில் 4வது இடம்.. ஜாம்பவான் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. 10 டெஸ்ட்டில் ரெக்கார்டு
சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இமாலய சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். இந்திய அளவில் முதல் பத்து டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பின் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் ஒருவரை முந்தி இருக்கிறார் ஜெய்ஸ்வால்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 56 ரன்கள் சேர்த்து இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் மூலம் அவர் பத்து டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்து, அதன் முடிவில் 1094 ரன்கள் குவித்து இருக்கிறார். மூன்று சதம், மற்றும் ஐந்து அரை சதங்களை அடித்து இருக்கிறார்.

இதன் மூலம் இந்திய அளவில் முதல் பத்து டெஸ்ட் போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார். முன்னதாக சுனில் கவாஸ்கர் 51 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆடிய முதல் பத்து டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 978 ரன்கள் சேர்த்து இருந்தார். அந்த சாதனையை இதுவரை வேறு எந்த வீரரும் முறியடிக்காத நிலையில் ஜெய்ஸ்வால் அதை முறியடித்து இருக்கிறார்.
மேலும், உலக அளவில் முதல் பத்து டெஸ்ட் போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார் ஜெய்ஸ்வால். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் தான் ஆடிய முதல் பத்து டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 1446 ரன்கள் சேர்த்து இருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் எவர்டன் வீக்கெஸ் 1125 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜார்ஜ் ஹெட்லி 1102 ரன்களும் சேர்த்து அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். ஜெய்ஸ்வால் 1094 ரன்கள் சேர்த்து நான்காவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் 1088 ரன்கள் சேர்த்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் 56, ஜடேஜா 86, அஸ்வின் 113 ரன்கள் சேர்த்து இருந்தனர். அடுத்து ஆடிய வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியது. அதில் ஜெய்ஸ்வால் 10 ரன்களும், ரோஹித் சர்மா 5 ரன்களும், விராட் கோலி 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சுப்மன் கில் 33 ரன்கள் எடுத்தும், ரிஷப் பண்ட் 12 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் சேர்த்து இருக்கிறது. மூன்றாவது நாளில் இந்திய அணி பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டும். அப்போது தான் வங்கதேச அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்து வீழ்த்த முடியும்.


Click it and Unblock the Notifications