டைம் லூப்பில் சிக்கிய இந்திய அணி.. ரிப்பீட்டாகும் 2007 டி20 உலகக்கோப்பை.. என்ன நடக்குது?
மும்பை : 2007 டி20 உலகக்கோப்பையின் போது நடந்த நிகழ்வுகள் அப்படியே மீண்டும் 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு நடப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - கனடா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழையால் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி ரசிகர்கள் ஒரு புதிய ஒப்பீட்டை கொண்டு வந்துள்ளனர். அதாவது 2007 டி20 உலகக்கோப்பை தொடரை போலவே மீண்டும் இந்திய அணிக்கு நடப்பதாக ரசிகர்கள் புதிய தியரியை கூறி வருகின்றனர்.

அதன்படி பார்த்தோம் என்றால், இந்திய அணி கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் விளையாடினார். அதேபோல் தற்போதும் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இருக்கிறார். 2007 டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியை, தொடரை நடத்திய தென்னாப்பிரிக்கா அணியே வென்றது. அதேபோல் தற்போதும் தொடரை நடத்தி வரும் அமெரிக்கா அணியே வென்றுள்ளது.
அதேபோல் 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் சமனில் முடிந்து, பவுல் அவுட் முறையில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. தற்போது அமெரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் முறையில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. அதேபோல் 2007 டி20 உலகக்கோப்பையை நடத்திய தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
தற்போதும் டி20 உலகக்கோப்பையை நடத்தி வரும் அமெரிக்காவுக்கு எதிராக இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் 2007 டி20 உலகக்கோப்பையை போலவே, பாகிஸ்தான் அணியை டிஃபெண்ட் செய்து இந்திய அணி வீழ்த்தியது. அதுமட்டுமல்லாமல் 2007ல் அசோசியேட் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட வேண்டிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது கனடா அணிக்கு எதிரான போட்டியும் ஈரப்பதம் காரணமாக ரத்தாகியுள்ளது. 2007 50 ஓவர் சாம்பியனாக ஆஸ்திரேலியா அணி இருந்தது. தற்போதும் ஆஸ்திரேலியா அணியே சாம்பியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐசிசி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications